மாஸ்கோ: திமிங்கலங்கள் பொதுவாகவே அமைதியானவையாக கருதப்படுகிறது. அதில் பெலுகாஸ் எனப்படுபவை ரொம்பவே சாது. நீருக்குள் மனிதரை பார்த்துவிட்டால் பூனைக்குட்டி போல வந்து ஒட்டிக்கொள்ளும். ‘சிரித்த முகம்’ அதன் ஸ்பெஷாலிட்டி. முகம், தாடையை ஒட்டியுள்ள சதைகள் ஒத்துழைப்பதால் பரதநாட்டிய கலைஞர் போல விதவிதமான முகபாவனைகள் காட்டும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த நன்கு ‘இதழ்’ விரித்து சிரிக்கும். உலகின் பல பகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் பெலுகாஸ் திமிங்கலங்கள் உள்ளன. பல நாடுகளில் இவை நீர் காட்சியகங்களில் வளர்க்கப்படுகின்றன.
கடலில் இருந்து இவற்றை பிடித்து காட்சியகங்களுக்கு கொண்டு வருவது சாமானிய வேலையல்ல. ‘ம்.. கிளம்பு’ என்றதும் பெலுகாஸ் வந்துவிடாது. அடம் பண்ணும். ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் முர்மன்ஸ்க் ஆப்லஸ்ட் என்ற இடத்தில் 2 பெலுகாஸ்களை அடக்கும் பணி சமீபத்தில் நடந்தது. ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஒயிட் ஸீயில் இருந்து இவை இரண்டையும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு கொண்டு வருவதற்கான வேலை தொடங்கியது. ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை நடாலியா அசீன்கோ (36) தயாரானார். பெலிகாஸ் திமிங்கலங்கள் பெரும்பாலும் செயற்கை பொருட்களை விரும்புவதில்லை.
நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் முகமூடி, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை பார்த்து அவை மிரள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். பெலிகாசுக்கு அந்த சங்கடம்கூட வரக்கூடாது என்பதால் ஆடைகளை களைந்துவிட்டு நீரில் இறங்க சம்மதித்தார் நடாலியா. துருவத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் உறைபனி அளவுக்கு சில்லென்று இருந்தது நீர். மனிதன் இறங்கினால் ஐந்தே நிமிடத்தில் இறந்துவிடக்கூடிய அபாயம். ஆனால், யோகா மற்றும் தியானத்தில் நடாலியா திறமைசாலி என்பதால் மூச்சை அடக்கி இறங்கினார். 10 நிமிடம், 40 வினாடியில் கடல் பகுதியில் இருந்து 2 திமிங்கலங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கொண்டு வந்தார். அந்த இரண்டுக்கும் நில்மா, மேட்ரனா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘‘நில்மாவும் மேட்ரனாவும் நெருங்கிய பிரெண்ட் போல பழகினார்கள். அவர்களை பிரியவே மனமில்லை’’ என்றார் நடாலியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக