ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமச்சீர் கல்வி திருத்த மசோதா நிறைவேற்றம் : எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு!

 சென்னை : சட்டசபையில் சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதன்மீது காரசார விவாதம் நடந்தது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்
. அதைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு: மு.க.ஸ்டாலின் (சட்டசபை திமுக தலைவர்): இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே திமுக சார்பில் எதிர்க்கிறேன்.

கோபிநாத் (காங்கிரஸ்): இந்த சட்ட முன்வடிவை காங்கிரஸ் சார்பில் எதிர்க்கிறோம். சபாநாயகர் ஜெயக்குமார்: பேரவையில் உங்கள் கருத்து பதிவு செய்யப்படுகிறது.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்கிறேன். கலையரசன் (பாமக): இந்த சட்ட முன்வடிவை எதிர்க்கிறோம்.  தங்கம் தென்னரசு (திமுக): தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சிறப்பான முறையில் இந்த கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இந்த பேரவையில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு அந்த திட்டத்தை கிடப்பில் போடும் நிலை உருவாகியுள்ளது. மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் ஆகிய 4 விதமான பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் இருந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீரான கல்வியை தர வேண்டும் என்பதால்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது.

சபாநாயகர் ஜெயக்குமார்: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடாத வகையில் பேசுங்கள்.
தங்கம் தென்னரசு: முத்துக்குமரன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல மாநில கல்விமுறைகளை ஆராய்ந்த பின்னரும் ஒரு பொதுவான கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: முத்துக்குமரன் குழு செய்துள்ள பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சமமான தரம், பள்ளிகளில் சமமான வசதிகள், நிர்வாகம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பதுதான் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை. ஏதாவது ஒன்று மட்டுமே சமமாக இருந்தால், அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வியை உருவாக்க முடியும் என்று கருதக்கூடாது.

தங்கம் தென்னரசு: பொதுவான பாடத்திட்டம்தான் இந்த கல்வி முறையின் நோக்கம். அதைத்தான் கொண்டு வந்துள்ளோம். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சமச்சீர் கல்வி என்பது பொதுவாக அடித்தட்டு மாணவர்களுக்கும் பயன் தரும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். இந்த கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, திட்டத்தை கொண்டு வர வேண்டும். எனவே, அரசின் சட்டத் திருத்த மசோதாவை புதிய தமிழகம் சார்பில் ஆதரிக்கிறோம். குரு (பாமக): கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டபோது, அதில் ஒரு சில குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறினார். அந்த குறைபாடுகளை நீக்கி இந்த கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி முறை சட்டம் கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பேரவையில் இருந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, அறிமுக நிலையிலேயே அதை எதிர்ப்பதாக கூறினார். ‘முத்துக்குமரன் குழு குறிப்பிட்ட பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். பிரிவுவாரியாக பாட திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். எனவே முழுமையாக இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்‘ என அவர் பேசியுள்ளார். செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி): அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே, இதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற மசோதாவை ஆதரிக்கிறோம்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): சமச்சீர் கல்வியை முழுமையான முறையில் உருவாக்க வேண்டும். திருத்தங்களை செய்து இந்த கல்வியை ஒரு காலவரைக்குள் கொண்டுவர வேண்டும்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): இது ஒரு சமூக நீதிக்கான சட்டமுன் வடிவு. இதில் திருத்தங்கள் இருக்குமானால், முத்துக்குமரன் குழு பரிந்துரையின் அடிப்படையில் திருத்தங்கள் செய்து காலதாமதமில்லாமல் சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டம் என்பது, ஒன்று முதல் 6ம் வகுப்பு வரை அல்ல. ஒன்று மற்றும் 6ம் வகுப்புக்கு மட்டுமே. முழுமையாக பரிசீலனை செய்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம். பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சமச்சீர் கல்வி என்பது எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பு தரும் வகையில் இருக்க வேண்டும். இதில் உள்ள குறைபாடுகளை களைந்து, வளைந்த செங்கோலை நிமிர்த்தும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். திருத்த மசோதாவை தேமுதிக சார்பில் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி தருமாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சமச்சீர் கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய உயர்நிலை குழு அமைக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக