இக்காலப்பகுதியில் கம்போடியாவின் பிரதமராகவும், கெமர் ரூச்சின் தலைவராகவும் இருந்தவர் போல் போட் எனப்படும் சர்வாதிகாரியாவார். இவரின் ஆட்சிக்காலத்தில் சுமார் 2 மில்லியன் பேர் உயிரிழந்தனர். இது அப்போது அந்நாட்டின் சனத்தொகையில் 26 வீதமாகும்.
கெமர் ரூச் ஆட்சியின் எதிரிகளாக கருத்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மக்கள் பலவந்தமாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர். சித்திரவதை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டதுடன் பட்டினியால் பலர் உயிரிழந்தனர்.
கம்போடியர்கள் மட்டுமன்றி சீனர்கள், வியட்நாம் இனத்தவர், தாய் இனத்தவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.பொல் போட்டின் ஆட்சியானது வியட்நாமின் போர்தொடுப்பிற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.இப்படுகொலைகளின் காரணகர்த்தாவான பொல் போட் 1998 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் இப்படுகொலைகளின் மற்றைய சூத்திரதாரிகளாகக் கருதப்படும் 4 பேர் ஐ.நாவின் வழக்கிற்கு தற்போது முகங்கொடுத்துள்ளனர்.இவர்களில் பொல் போட்டிற்கு அடுத்த முக்கியமான நபராக கருதப்படும் நுஹான் சே முக்கியமானவராவர்.
இவரைத்தவிர முன்னாள் ஜனாதிபதி கீயு சம்பான், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லெங் சாரி மற்றும் அவரின் மனைவி லெங் திரித் ஆகியோரும் இவ்வழக்கிற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவர்கள் தங்களது குற்றத்தினை மறுத்துள்ளனர்.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான நிகழ்வாக கருதப்படும் இந்த இனப்படுகொலை வழக்கின் தீர்ப்பினை முழு உலகமும் எதிர்பார்த்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக