‘பயங்கரவாததிற்கு எதிரான போர்’ என்று கூறி, ஆஃப்கானிஸ்தானில் இருந்து ஈராக் வரை தனது பயங்கர ஆயுத வலிமையைக் கொண்டு போரைத் திணித்த அமெரிக்கா, தன் படையினரிடம் சிக்கும் பயங்கரவாதிகளை ‘விசாரிக்க’ 2002ஆம் ஆண்டு ஜனவரியில் குவாண்டனாமோ பே சிறைச்சாலையை திறந்தது. இந்த சிறையில் 2002 முதல் 2008ஆம் ஆண்டு வரை விசாரிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் சிலர் அளித்த வாக்குமூலங்களில் இருந்த திரட்டப்பட்ட தகவல்கள்தான் விக்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டுள்ளவையாகும்.
அதில், சில பயங்கரவாதிகள், தாங்கள் பயிற்சி பெற்ற இடம் பாகிஸ்தான் என்றும், தங்களை பயிற்றுவித்தது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. என்பதையும், இந்தியாவில் தாக்குதல் நடத்த தங்களைத் தூண்டியதே ஐ.எஸ்.ஐ.தான் என்பதையும், இந்தியாவிற்கு எதிராக நடந்த தாக்குதல்களை திட்டமிட்டு நிறைவேற்றிய லஸ்கர் இ தயீபா போன்ற பயங்கரவாத இயக்கங்களை இயக்கி வருவது ஐ.எஸ்.ஐ.தான் என்றும் கூறியுள்ளனர்.
இந்தியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. இருக்கிறது என்று 15 ஆண்டுகளாக இந்திய அரசு குற்றஞ்சாற்றி வருகிறது. ஆனால் அதனை வெளிப்படையாக ஒரு முறை கூட அமெரிக்க அரசு ஆமோதித்ததில்லை என்பதுதான் வினோதம்.
பயங்கரவாததிற்கு எதிராக உலகளாவிய அளவில் தாங்கள் நடத்திவரும் போரில் பாகிஸ்தான் ‘நம்பத்தகுந்த கூட்டாளி’ என்று அந்நாட்டு அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் முதல் இன்று அதிபராக உள்ள பராக் ஒபாமா உட்பட அந்நாட்டு நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கூறி வந்துள்ளனர்.
தங்கள் நாட்டிற்கு எதிராக ஒரே ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்திய அல் கய்டா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை குறிவைத்து பத்தாண்டுகளுக்கு மேலாக உளவறிந்து சுட்டுக் கொன்ற அமெரிக்கா, அதேபோல், தங்கள் நாட்டிற்கு எதிராக ஒன்றல்ல, பல தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத இயக்கங்களின் மூளையாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட பலரை கொன்றொழிக்க இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க முடியாது என்று சமீபத்தில் கூறியிருந்தது.
அமெரிக்க அதிபர் மாளிகையின் பேச்சாளர் மார்க் டோனர், நியூ யார்க் மீது நடந்த தாக்குதலையும், மும்பையின் மீது நடந்த தாக்குதலையும் ஒப்பிட முடியாது என்று கூறினார். இதற்காக அவர் கற்பித்த நியாயம் இதுதான்: ”இதில் சம்பந்தப்பட்ட நபர் (ஒசாமா பின் லேடன்) அமெரிக்கர்களுக்கு எதிராக மட்டுமல்ல, உலக மக்களுக்கு எதிராகவும் மிகக் கொடிய குற்றங்கள் புரிந்தவர்”.
இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட லஸ்கர் இ தயீபா, ஜெயிஷ் இ மொஹம்மது ஆகியவற்றின் பயங்கரவாதிகள் ஆஃப்கானிஸ்தானத்திலும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்பதும், இந்த இயக்கங்கள் எல்லாம் அய் கய்டாவிற்கோ அல்லது தாலிபான்களுக்கோ சகோதர இயக்கங்களாகத்தான் செயல்பட்டன என்பதும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் உள்ள குவாண்டனாமோ பே சிறைக் கைதிகள் அளித்துள்ள வாக்குமூலங்கள் தெட்டத் தெளிவாக விளக்குகின்றன.
அதுமட்டுமல்ல, அய் கய்டாவில் இருந்து லஸ்கர் இ தயீபா வரை அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் பயிற்றுவித்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.தான் எனும்போது, அதில் என்ன வேறுபாடு உள்ளது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக