பெய்ஜிங்: சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.
லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.
சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.
அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாக காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.
லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.
சே, நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக