சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தற்போது புதிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நித்யானந்தா தற்போது கர்நாடகாவில் உள்ளார். அங்குள்ள பிடதி ஆசிரமத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்
.
அப்போது ஏற்பட்ட தகராறில் நித்யானந்தாவின் சீடர்கள் தங்களை தாக்கியதாக டி.வி நிருபர் ஒருவரும், நவநிர்மாண் சேனா தொண்டர்களும் தனித்தனியாக இரண்டு புகார்கள் அளித்துள்ளனர். அப்புகார்களின் அடிப்படையில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மீது இரண்டு வழக்குகளை கர்நாடக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உள்பட, நித்யானந்தாவின் 17 சீடர்கள் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நித்யானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, நித்யானந்தாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது நித்யானந்தாவின் சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாகக் கூறி, செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சீடர்கள் தங்களையும் தாக்கியதாக நவநிர்மாண் சேனா தொண்டர்களும் புகார் அளித்துள்ளனர்.
நவநிர்மாண் சேனா தொண்டர்கள்மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்யானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக