கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் மரிய இருதயம். இவரது மனைவி பிலோமினா. பெரியமேடு நேவல் ஆஸ்பத்திரி ரோட்டில் வசித்து வரும் இவர்கள் இருவரும் நேற்று மாலையில் வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் புறப்பட்டு சென்றனர்.
வேப்பேரியில் இருந்து டவுட்டன் மேம்பாலத்தில் ஏறி உள்பக்கமாக இறங்கினர். டாணா தெருவுக்கு திரும்புவதற்கு முன்னர் மெயின்ரோட்டில் வைத்து பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி ஸ்கூட்டியில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பிலோமினா, வலது பக்கமாக ரோட்டில் விழுந்தார். அப்போது குப்பை லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
தனது கண் எதிரே மனைவி பலியானதை கண்டு கணவர் மரிய இருதயம் தலையில் அடித்தபடி கதறி அழுத்தார். உடனடியாக லாரி டிரைவர் ஆறுமுகம் லாரியில் இருந்து குதித்து தப்ப முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விரைந்து வந்து டிரைவர் ஆறுமுகத்தை பொதுமக்களின் பிடியில் இருந்து மீட்டார். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.
அதிக வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டி வந்து மரணத்தை ஏற்படுத்தியதாக 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் டிரைவர் ஆறுமுகம் போதையில் இருந்ததாக போலீசாரிடம் புகார் செய்தனர். ஆனால் போலீசார் இதனை மறுத்தனர். இருப்பினும் ஆறுமுகம் மது அருந்தி இருந்தாரா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது ரத்தத்தை பிரித்து எடுத்து பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர்.
பிலோமினாவின் உயிரை பறித்த குப்பைலாரி மட்டுமின்றி, பெரும்பாலான குப்பை லாரிகளும் கண் மூடித்தனமாக சாலைகளில் செல்வதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு இரு சக்கர வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எப்போதும் நெரில் அதிகமாகவே இருக்கும். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக