கும்பகோணம்: கும்பகோணத்தில் திருமண வீட்டுக்குள் 6 அடி நீள முதலை ஒன்று புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அணைவரை ஊர் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. அந்த ஆற்றில் உள்ள முதலைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வீ்ட்டு விலங்குகளை பிடித்து செல்வது உண்டு. ஆனாலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தும், குளித்தும் வருகின்றனர்.
தற்போது தொடர் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள முதலைகள் கரையோரம் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களை பீதியடையச் செய்கின்றன.
அனைகரையை அடுத்த தென்கரையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. நேற்று இவரது மகனுக்கு திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என திருமண வீடு களைகட்டியது. நேற்று வீட்டு முன் அமைக்கப்பட்ட திருமண பந்தலில் விருந்து பறிமாறப்பட்டது.
அப்போது அழையா விருந்தாளியாக 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று திருமண பந்தலுக்குள் நுழைந்தது. அதைப் பார்த்த விருந்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் சேர்ந்து அந்த முதலையைப் பிடித்தனர். அதன் பிறகு இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக