மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மும்பையில் உள்ள பாரத்மாதா சினிமா தியேட்டருக்கு அருகே உள்ள எச்எஸ்பிசி வங்கியின் ஏடிஎம்முக்கு 21 வயதான வாலிபர் பணம் எடுக்க வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கு வாலிபரின் கையில் இருந்த கார்டு மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அதை வாங்கிப் பார்த்தபோது சச்சின் டெண்டுல்கருக்குச் சொந்தமானது அது என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சோயப் தூத்வாலா என்றும், மாஹிம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து கார்டைக் கைப்பற்றினர். அந்தக் கார்டு உண்மையிலேயே சச்சின் டெண்டுல்கருடையா கார்டுதானா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இது எப்படி இந்த இளைஞரின் கையில் வந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை சச்சின் டெண்டுல்கரின் கார்டு தகவல்களை வைத்து இது போலியாக தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கார்டு தவிர நான்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் நான்கு வங்கிகளின் டெபிட் கார்டுகளும் அந்த இளைஞரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையின்போது தான் ஜூனியர் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வருவதாக கூறியுள்ளார் அந்த நபர். மேலும் தான் வைத்திருந்த சச்சின் டெபிட் கார்டு பஸ் ஸ்டாப் ஒன்றில் கீழே கிடந்ததாகவும், அது செயல்படுகிறதா என்று பார்க்க ஏடிஎம் மையத்துக்கு வந்ததாகவும் தூத்வாலா கூறியுள்ளார். ஆனால் போலீஸார் அவரது பேச்சை நம்ப மறுத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சச்சின் டெபிட் கார்டு குறித்து சம்பந்தப்பட்ட வங்கியை போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் சேகரித்து வருகின்றனர். அதில் சச்சினுடைய கார்டுதான் என்பது உண்மையானால், சச்சினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், இதுவரை கார்டு காணாமல் போனதாக சச்சின் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்பதும் போலீஸாரைக் குழப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக