எப்படியெல்லாமோ சாவு வருகிறது. மாரடைப்பு, விபத்து, கொலை என பல வழிகளில் வருகிறது. இளம் வயதில் ஏற்படும் மரணம்தான் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒன்றுமே அனுபவிக்காமல் அநியாயமாக இறந்து போனால், இருப்பவர்கள் புலம்பித் தள்ளி விடுவார்கள். அப்படித்தான் 19 வயதில் அநியாயமாக இறந்து போனார்கள்
மூன்று மாணவர்கள். தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த அந்த மாணவர்கள், இருட்டில் இரும்பு பைப்பை குழியில் வைப்பதற்காக தூக்கியுள்ளனர். தங்கள் துறை சார்பாக நடக்கும் நிகழ்ச்சியை விளக்கும் பிளக்ஸ் போர்டு அது. மேலே மின் கம்பி போயிருக்கிறது. மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
கோவை கருமத்தம்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தங்கள் துறை விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்துள்ளது. மேலே மின் கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியை தோண்டி பைப்பை நட முயன்றனர். எதிர்பாராதவிதமாக இரும்பு பைப், மின் கம்பி மீது உரசியது.
பைப்பில் மின்சாரம் பாய்ந்து, கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களை காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனால் இதை தவிர்த்திருந்திருக்கலாம். பகலில் அந்த பிளக்ஸ் போர்டை வைத்திருந்தால், மேலே மின் கம்பி போவது தெரிந்திருக்கும். ஆனால் இருட்டில் அதுவும் இரவு 10 மணிக்கு அந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். கம்பி இருப்பதை மறந்துபோய் செயல்பட, பைப் அதில் பட மின்சாரம் பாய்ந்து பலியாகி விட்டனர். அந்த இடத்தில் போதுமான விளக்கு வெளிச்சம் இருந்திருந்தாலும் இந்த பரிதாப சம்பவம் நடந்திருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக