, திமுக செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது அவர், ’’எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன். அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப் படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன்.
அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை. இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு.க.வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. எவரும் அழிக்க முடியாது.
சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம். யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், நான், அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம்.
தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்க வில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக துவக்கினோம். ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக் கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது. இருந்தாலும், இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கும் தோல்வி.
அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என, முழங்கிக் கொண்டுள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும் நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது. தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்’’என்று பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக