கும்பகோணம்: குடந்தை பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளுக்காக இன்று மாலை மகாமக குளத்தில் மக்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி இறந்தன. 18 குழந்தைகள் படுகாயமடைந்தன. இந்த சோக சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, விபத்து நடந்த பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் படங்களுடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் பொதுமக்களும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, அன்பழகன் எம்எல்ஏ, நகராட்சி தலைவர் தமிழழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெற்றோர்கள், தங்கள் வீடுகளில் குழந்தைகளின் படங்களை வைத்து படையலிட்டு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் பாலக்கரையில் எழுப்பப்பட்டுள்ள தீ விபத்து நினைவு மண்டபத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் இருந்து அகல் தீபம் ஏந்தி ஊர்வலமாக சென்று மகாமக குளத்தில் மோட்சதீபம் ஏற்றுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக