இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். ஐந்து ரோடு அருகே பிரிமியர் ரோலர் ப்ளவர் மில் நடத்தி வந்தார். அவர், ராமநாதன், ரவிச்சந்திரன், பாலாஜி, வேணுகோபால் உள்ளிட்ட நான்கு மகன்களுடன், மில்லை கவனித்து வந்தார். கடந்த 2007ல், சேலம் சின்னக்கடை வீதியைச் சேர்ந்த ஆடிட்டர் துரைசாமியிடம், மூன்று கோடி கடன் கேட்டு, அதற்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தார். பணத்துக்கான வட்டியை முறையாக செலுத்தி வந்த நிலையில், கடன் தொகையை செலுத்தி மில்லை மீட்க முயற்சி எடுத்தார். "மில்லை திரும்ப வழங்க முடியாது, பவர் எழுதி கொடுத்து விட்டாய்' எனக் கூறி, ஆடிட்டர் துரைசாமி, வெங்கடாசலத்தை அவமானப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் ஆறுமுகம், அவரது வலது கரமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் லட்சுமணன், துரைசாமி, அவருடைய மகன் அசோக் துரைசாமி உள்ளிட்டோர், வெங்கடாசலத்திடம், "நிலத்தை விற்பனை செய்து விடு' என, மிரட்டினர். வீரபாண்டி ஆறுமுகமும் தொடர்ந்து அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். இறுதியாக, வெங்கடாசலம் மற்றும் அவரது மகன்களை மிரட்டி மில்லை எழுதி வாங்கி விட்டனர். அந்த மில்லை, பிரபல ஜவுளிக்கடை அதிபர் சீனிவாசனிடம், 30 கோடி ரூபாய்க்கு, வீரபாண்டி ஆறுமுகம் விற்பனை செய்தார். அந்த தொகையில், வெங்கடாசலத்துக்கு, 7 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில், முன்னாள் அமைச்சர்க்கு, 15 கோடி ரூபாய், இன்ஸ்பெக்டருக்கு, 4 கோடி ரூபாய், ஆடிட்டர் துரைசாமிக்கு, 4 கோடி ரூபாய் கைமாற்றப்பட்டுள்ளது. மில்லை பறிகொடுத்த வேதனையில், வெங்கடாசலம் உயிரிழந்து விட்டார்.
மில்லை மீட்டுத்தரவேண்டும் என, முதல்வர் ஜெயலலிதாவிடம், வெங்கடாசலம் குடும்பத்தினர், புகார் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு சேலம், நிலம் அபகரிப்பு மீட்புக்குழு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சங்கமேஸ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம், அவரை அடுத்து, ஆடிட்டர் துரைசாமி, ஜவுளிக்கடை அதிபர் சீனிவாசன் மகன்கள் ராமநாதன், ரவிச்சந்திரன், அசோக் துரைசாமி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கீதா, ராஜேஸ்வரி, சுமத்ராதேவி , மாநகர தி.மு.க., துணைச் செயலர் அழகாபுரம் முரளி, விஜய்பாபு ஆகியோர் மீது, சட்டவிரோதமான கூட்டம், ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல், அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், உயில் உள்ளிட்ட ஆவணங்களை திருத்துதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல், குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகம் மீது ஏற்கனவே, சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுகை நகராட்சி தலைவர் கணவர் மீது போலீசில் புகார் : புதுக்கோட்டை நகராட்சி தலைவரின் கணவரும், தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞருமான உடையப்பன் மீது, 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்துள்ளதாக, நில உரிமையாளர்கள் இரண்டு பேர், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையைச் சேர்ந்தவர் இளங்கோ, 50. இவருக்கு புதுக்கோட்டை அடுத்த 9ஏ நத்தம் பண்ணை கிராமத்தில், 70 சென்ட் நிலம் உள்ளது. புதுக்கோட்டை - திருச்சி சாலையில் உள்ள இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய்.
காலியாக கிடந்த இந்த நிலத்தை, 1994ம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் ராமதிலகத்தின் கணவரும், தி.மு.க., வழக்கறிஞருமான உடையப்பனுக்கு, நர்சரி தோட்டம் அமைப்பதற்காக, மாதம், 500 ரூபாய் வாடகை பேசி முன்பணமாக, 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, ஐந்து ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். குத்தகை காலம், 1999ம் ஆண்டோடு முடிந்துவிட்ட நிலையில், நிலத்தை காலி செய்துதருமாறு உடையப்பனிடம், நில உரிமையாளர் இளங்கோ கேட்டுள்ளார். நிலத்தை ஒப்படைக்க மறுத்த உடையப்பன், வாடகை வழங்குவதையும் நிறுத்தியுள்ளார். புதுக்கோட்டை டவுன் திருக்கோகர்ணம் பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 70. இவருக்கு 9ஏ நத்தம் பண்ணை கிராமத்தில், 5 சென்ட் வீட்டுமனை உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, 5 லட்ச ரூபாய். அவரது இடத்தை அபகரித்து வைத்துள்ள உடையப்பன், அதில் மரங்களை நட்டு வைத்துள்ளார். இளங்கோ மற்றும் பார்த்திபன் ஆகியோர், தி.மு.க., வழக்கறிஞர் உடையப்பன் அபகரித்து வைத்துள்ள தங்கள் நிலங்களை மீட்டுத்தரக் கோரி, புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராசசேகரனிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்ஜாமின் பெற முயற்சி : இரு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்ஜாமின் பெருவதற்கு, போலீசாரே மறைமுகமாக உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முழு விவரங்களும், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட, குற்றம் சுமத்தப்பட்டுள்ள, 11 பேருக்கும் சென்றடைந்துள்ளது. இதில் முக்கியமாக வழக்கின் முதல் தகவல் அறிக்கை உட்பட, அனைத்து ஆவணங்களின் நகல்களையும், போலீசாரே முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தரப்பிடம் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே நிலை தான், வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பிரிமியர் மில் வழக்கிலும் உள்ளது. போலீசார், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறினாலும், வழக்கு பதிவு செய்த பின், கைது நடவடிக்கையில் காலதாமதம் செய்து வருவதாக போலீஸ் தரப்பில் ஒரு பிரிவினர் குமுறுகின்றனர். அதே நேரத்தில், இரு வழக்குகளிலும், மொத்தம் 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட, 20 பேர் தங்களை கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முன்ஜாமின் பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜாமின் பெற, மாநகர போலீஸ் அதிகாரிகள் மறைமுகமாக உதவி செய்து வருவதை அறிந்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.