ஆட்சி மாற்றத்தால், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக பெயர் மாற்றம் செய்யவும், அந்த திட்டத்தை செயல்படுத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றம் செய்யவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள், இன்னும் சில தினங்களில் வெளியாகும் என, மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தி.மு.க., ஆட்சியில், கடைசி இரண்டு ஆண்டுகளில், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் துவக்கப்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள, 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமின்றி முக்கிய நகரங்கள், தாலுகாக்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப்பட்டது.திட்டத்தை செயல்படுத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்தியதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பலருக்கு, சிகிச்சைக்கான தொகைகளில், குறிப்பிட்ட சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டது. அதனால், தனியார் மருத்துவமனைகள், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய தொகை போக, மீதி தொகையை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கத் துவங்கின. இது, மருத்துவமனைகளின் நிர்வாகத்துக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, பல்வேறு தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இருந்து விலகின. அரசின் கொள்கை முடிவு திட்டம் என்பதோடு, தேர்தல் நெருங்கியதால் இத்திட்டத்தில் இருந்து விலகிய தனியார் மருத்துவமனைகளின் விவரங்களை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை. இதன் காரணமாக, இத்திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் சிகிச்சை பெற முடியால் அவதிப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில், இத்திட்டத்தில் செய்யப்பட்ட ஆபரேஷன்களுக்கு, டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சேர வேண்டிய ஊக்கத் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
தமிழக தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மருத்துவத் துறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதல் கட்டமாக, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கு நெருக்கமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை, இத்திட்டத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு மாற்றாக, புதிய இன்சூரன்ஸ் நிறுவனத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற இத்திட்டத்தை விரைவில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, குழு அமைக்கப்படுகிறது.இக்குழு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக