ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...


வெளிநாட்டு பணி மோகத்தில் பணத்தை இழக்கும் இளைஞர்கள்
"வாயக்கட்டி, வயித்தக்கட்டி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்...' என்று மூடப்பட்ட சீட்டு நிறுவனங்கள் முன்பும், அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களில் பலர் இன்றும் கண்ணீருடன் நிற்பதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது வெளிநாட்டுக்கு செல்வதற்காக போலி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


தமிழகத்தை பொறுத்தவரை, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 67 லட்சம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர். ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் பல்வேறு பட்டப்படிப்புகள் முடித்து வெளியில் வருகின்றனர். அவர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் படிப்புகளை பதிவு செய்தும் வைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் வேலை கொடுப்பது யார்? அரசு தரப்பில், ஆண்டு தோறும் அனைத்து துறைகளிலும் சேர்த்து ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுகின்றனர். காலியான பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படுவதில்லை. பணியாளர் பற்றாக்குறை என்பது, அரசு அலுவலகங்களில் இன்னும் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், அவற்றில், வெளிமாநிலத்தவர்கள் பெரும்பாலும் இடம் பெறுகின்றனர். புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும் போது, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவுகளை பெரும்பான்மை நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை. தகுதி, அதிக சம்பளத்தை காரணம் காட்டி, பணி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனங்களில் இருந்து தினக்கூலி அளிக்கும் கட்டுமான நிறுவனங்கள் வரை நடக்கும் பிரச்னை.

அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்திருந்தாலும், ஒரு புறம் வேலையில்லா திண்டாட்டமும் தொடர்ந்து வருகிறது. இவற்றையெல்லாம் விட, படித்து முடித்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என விளம்பரங்கள் பத்திரிகைகள், இன்டர்நெட் உள்ளிட்டவற்றில் வெளிவருவதை பார்க்க முடியும். இவ்வாறு வெளிவரும் விளம்பரங்களில் உண்மையாகவே வேலைக்கான விளம்பரம் என்பது 60 சதவீதம் மட்டுமே என்று கூறப்படுகிறது. இவை தவிர, சில நேரங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பி தங்கள் பணம் மொத்தத்தையும் இழந்து நிற்பவர்கள் எண்ணிக்கை அதிகம். சமீபத்தில் மதுரை பகுதியில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறியவர்கள், லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு, தங்களை நம்பி பணம் அளித்தவர்களை ஏமாற்றிச் சென்று விட்டனர். அதே போல், சென்னையைச் சேர்ந்த சிலரும், தமிழகம் முழுவதும் இருந்து பாஸ்போர்ட், பணம் அளித்தவர்களை ஏமாற்றியுள்ளனர். சமீபத்தில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ், அவரது மனைவி பிரியவர்த்தினி ஆகியோர் இதே வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் சிக்கியுள்ளனர். இவர்கள், சென்னை, கும்பகோணம், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்களிடம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, சிங்கப்பூர் ஓட்டல் பணிக்காக பாஸ்போர்ட் அளித்தவர்களுக்கு, போலியான விசாவும் தந்து ஏமாற்றியுள்ளனர். பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் அனைவரும், தங்கள் பணம் போனால் போகட்டும், பாஸ்போர்ட்களையாவது பெற்றுத் தாருங்கள் என போலீசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இது போன்று, கடந்த சில தினங்களுக்கு முன், இத்தாலிபழ ஏற்றுமதி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றுத் தருவதாக, அமைந்தகரையைச் சேர்ந்த ஒருவர் 2.5 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பாஸ்போர்ட்டை கேடடால், அவரது நண்பர் 15 ஆயிரம் ரூபாய் தந்தால் தான், பாஸ்போர்ட்டை தரமுடியும் என்று கூற, விவகாரம் போலீசிற்கு சென்றுள்ளது. பணத்தை கொடுத்தவர்கள், தாங்களே சட்டத்தை கையில் எடுத்து, பணம் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவரை கடத்திய சம்பவமும் சென்னையில் அரங்கேறியுள்ளது. சூளைமேட்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த ஒருவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவரிடம் 6 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்ற, வெகுண்டெழுந்த இருவரும், அந்த நபரை கடத்தி போலீசிடம் மாட்டிக் கொண்டனர். வழக்கை விசாரித்த போலீசார், ஏமாற்றியவரையும் சேர்த்து கைது செய்தனர். இவ்வாறாக சென்னை மற்றும் தமிழகம் எங்கும் 10 வழக்குகள் வரையில் பதிவாகியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசார், சம்பந்தப்பட்டவர்களை பிடித்து, நடவடிக்கை எடுத்தாலும், கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட்டை வாங்குவதற்கு புகார்தாரர்கள், மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இம்மாதிரியான விஷயங்களில் பொதுமக்கள் தங்கள் பணத்தை கொடுத்து ஏமாறுவதை தடுக்க, அரசும், காவல் துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், பொதுமக்களும், மத்திய அரசு பட்டியலிட்டுள்ள நிறுவனங்களை தவிர, மற்றவர்களை அணுகக் கூடாது என்பதை காது கொடுத்து கேட்டால் பணத்தையும் அதன் மூலம் உழைப்பையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் கிடைக்குமா? வெளிநாடுகளில் வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றுபவர்கள், தன்னை நம்பி வருபவர்களிடம் நம்பிக்கையை பெறுவதற்காக அவர்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அத்துடன், வேலைஅளிக்கும் நிறுவனம் வழங்கும் சம்பளத்தின் அடிப்படையில் தங்களுக்கான கமிஷனையும் பெற்றுக் கொள்கின்றனர். வாக்குறுதியளித்தபடி, வெளிநாட்டுக்கு அனுப்பாமல், பணத்தையும், பாஸ்போர்ட்டையும் திரும்பித் தராமல் போலீசுக்கு புகார் சென்றால், பாதிக்கப்பட்டவர் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு படாத பாடு பட வேண்டி வரும் என கூறப்படுகிறது. வழக்கு போடப்பட்டால், பாஸ்போர்ட்டை கோர்ட்டில் போலீசார் சமர்ப்பிப்பார்கள். அங்கிருந்தே அந்த பாஸ்போர்ட்டை பெற முடியும். வழக்கில் பாஸ்போர்ட் சிக்கிவிட்டால், அதிலும், மோசடிதாரர் அந்த பாஸ்போர்ட்டில் போலி விசாவுக்கான பதிவுகளை செய்துவிட்டால், அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாது. போலீசின் சான்றிதழ் பெற்று பாதிக்கப்பட்டவர், புதிய பாஸ்போர்ட் மட்டுமே பெற முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக