ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, திகார் சிறையில் உள்ள பெண்கள் சிறை வளாகத்தில், சிறை எண் 6ல் அடைக்கப்பட்டுள்ளார். இது, 15க்கு 10 அடி அளவுள்ள அறை.இந்த அறையின் மூன்று பக்கங்கள் சுவர்களால் ஆனது. மீதமுள்ள பக்கம், கம்பிகளால் ஆனது.
காற்று வசதிக்காக, அறையின் மேல் புறத்தில், மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. அறையில் உள்ள காற்று, வெளியில் செல்வதற்காக, கழிவறை அருகே, "எக்ஸ்சாஸ்ட் பேன்' பொருத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஸ்டைல் கழிவறை, "டிவி' ஆகிய வசதிகளும் இந்த அறையில் உள்ளன.
பெண் கைதிகள்: திகார் சிறையில், தற்போது, 500க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில், சில வி.ஐ.பி.,க்களும் உண்டு. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து, அன்னிய நாட்டுக்கு உளவு பார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மாதுரி குப்தா, டில்லியில், மிகப் பெரிய அளவில் விபசாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சோனு பூஜம், கவுன்சிலர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சரதா ஜெயின் ஆகியோர், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.புத்தகம் படிக்கிறார்
சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னை உள்ளதால், அதற்கு தேவையான சில மருந்துகளை, கனிமொழி கொண்டு வந்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை படிக்கிறார். பெரும்பாலான நேரம், மிகவும் அமைதியாகவே காணப்பட்டார். கனிமொழி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவருக்கு, கூடுதலாக இரண்டு தலையணைகள் கொடுக்கப்பட்டன.இதைத் தவிர, வேறு எதையும் அவர் கேட்கவில்லை. திகார் சிறைக்கு, அவர் அழைத்து வரப்படுவதற்கு, 15 நிமிடங்களுக்கு முன், தி.மு.க.,வைச் சேர்ந்த எட்டு எம்.பி.,க்கள், சிறை வளாகத்துக்கு வெளியில் காத்திருந்தனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மூக்குத்திக்கு அனுமதி இல்லை: திகார் சிறையின் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.என்.சர்மா கூறியதாவது: பாதுகாப்பு காரணங்கள் கருதி, கனிமொழிக்கு, தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறப்பு சலுகை எதுவும் செய்யப்படவில்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற கைதிகளுக்கு, விதிமுறைப்படி என்ன சலுகை வழங்கப்படுகிறதோ, அதே மாதிரியான சலுகை தான், கனிமொழிக்கும் வழங்கப்படுகிறது. தென் மாநில உணவு வகைகளை சாப்பிட, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சிறப்பு சலுகை அல்ல. சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கும், தென் மாநில உணவு வகைகளை சாப்பிட அனுமதி உண்டு. சிறை விதிமுறைப்படி, வாரத்தில் இரண்டு முறை, உறவினர்களை சந்திப்பதற்கு, அவருக்கு அனுமதி உண்டு. மருந்து, புத்தகம், மூக்கு கண்ணாடி போன்றவற்றை, சிறை அறைக்குள் எடுத்துச் செல்ல, அவருக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. வீட்டிலிருந்து, உணவு எடுத்து வரவும், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மூக்குத்தி அணிந்து கொள்வதற்கு, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. சிறை விதிமுறைப்படி, நகைகள் அணிந்து கொள்வதற்கு, பெண்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு சர்மா கூறினார்.
மகனுக்காக கலங்கிய கனிமொழி: கனிமொழிக்கு பாதுகாவலாக இருந்த பெண் போலீசார் ஒருவர் கூறியதாவது: சிறை அறைக்குள் நுழைந்ததுமே, தன் மகன் ஆதித்யாவுக்காகத் தான், கனிமொழி மிகவும் கலங்கினார். "ஒரு நாள் கூட, என் மகனை பிரிந்து இருந்தது இல்லை' என, அவர், என்னிடம் கூறினார். அதேபோல், சிறை விதிமுறைப்படி, மூக்கில் இருந்த மூக்குத்தியை கழற்றும்படி கூறியதற்கும், அவர் மிகவும் கவலைப்பட்டார். பத்து வயதில் இருந்து, மூக்குத்தியை அணிந்திருப்பதாக கூறினார். இவ்வாறு அந்த பெண் போலீஸ் கூறினார். நேற்று முன்தினம், கோர்ட் வளாகத்தில் இருந்து, கனிமொழி சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், அவரது மகன் ஆதித்யாவை, கோர்ட் வளாகத்துக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது, கலங்கிப் போன விழிகளுடன், தன் மகனைப் பார்த்து, "திரும்பி வரும்வரை, சமர்த்தாக இரு' என, கனிமொழி கூறியதாக, கோர்ட் வளாகத்தில் இருந்தவர்கள் கூறினர்.
திகார் சிறையில் உள்ள மற்ற வசதிகள்:
* சிறையில் உள்ள ஒவ்வொரு கைதிகளை பற்றிய விவரமும், இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. கைதிகளின் புகைப்படங்கள், அவர்களை பற்றிய விவரங்கள் மற்றும் கைவிரல் ரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகின்றன. கைதிகளை அடையாளம் காண்பதற்கும், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்வதற்கும், இந்த வசதி, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக, சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
* முக்கிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும் என்பதற்காக, சிறை வளாகத்திலேயே "வீடியோ கான்பரன்சிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கைதிகளின் கோர்ட் காவலை நீட்டித்து கொள்ள முடியும்.
* குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளை அடையாளம் காட்டுவதற்கான, கண்ணாடி தடுப்புடன் கூடிய கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நேரில் பார்த்தவர்கள், இங்கு அழைத்து வரப்பட்டு, கண்ணாடி தடுப்பின் ஒரு பக்கம் நிறுத்தப்படுவர். மற்றொரு பக்கம் குற்றவாளி நிறுத்தப்படுவார். இங்கு பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி, ஒரு பக்கம் மட்டுமே பார்க்கும் வசதி (ஒன்வே கிளாஸ்) உடையது. சாட்சிகள் மட்டுமே, குற்றவாளிகளை பார்க்க முடியும். தங்களை அடையாளம் காட்டுவோரை, கைதியால் பார்க்க முடியாது.
* இங்கு, அதிநவீன பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்-ரே ஸ்கேனர், மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவை செயல்படுகின்றன. அதிவிரைவு பாதுகாப்பு படை, துணை ராணுவ படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு, அதிநவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில், 24 மணி நேரமும் இயங்கும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* கைதிகளின் மறுவாழ்வு பணிகளுக்காக, பல்வேறு தொழிற்கூடங்களும், இங்கு செயல்படுகின்றன. கைத்தறி, தச்சு, ரசாயனம், காகிதம், தையல், பேக்கரி, மண்பாண்டம் ஆகிய தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிற்சி பெறும் கைதிகள், தண்டனை காலம் முடிந்ததும், வெளியில் சென்று, இதே தொழிலை செய்து, பிழைப்பை நடத்துவதற்காக, இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி வெயில்: திகார் சிறை அதிகாரி ஒருவர் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஒரு அறை சற்று மாற்றம் செய்யப்பட்டு, அதில் தான் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார். சீலிங் பேன், தரையிலிருந்து, 30 அடி உயரத்தில் உள்ளது. கைதிகள் யாரும் தற்கொலை முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காவே இவ்வளவு உயரத்தில் பேன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அறைக்குள் காற்று வளமாக அடிக்காது.டில்லியில் தற்போது கடும் அனல் வீசுகிறது. ஏறத்தாழ, 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வெப்பக் காற்றிலிருந்து காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை என, வி.ஐ.பி., கைதி ஒருவர் வருத்தம் தெரிவித்தார்.
கோர்ட் வளாகம்: திகார் சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிறை வளாகத்திலேயே, கோர்ட்டும் செயல்படுகிறது. மாதம்தோறும் இந்த கோர்ட் கூடி, விசாரணை கைதிகளின் வழக்குகளை விசாரிக்கும். சிறிய குற்றங்களில் ஈடுபட்டோர் மற்றும் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராக இருக்கும் கைதிகளின் வழக்குகள் மட்டுமே இங்கு விசாரிக்கப்படும். கைதிகளுக்கான சட்ட உதவி மையமும் இங்கு செயல்படுகிறது.
கைதிகளை அடைக்கும் நடைமுறை:
* முதல் முறையாக குற்றம் செய்து, சிறைக்கு வரும் கைதிகள், மாதிரி சிறையில் அடைக்கப்படுவர். இந்த, மாதிரி சிறையை, டில்லி திகார் சிறையின் வரவேற்பறை என அழைப்பது உண்டு. கடுமையான குற்றவாளிகளுடன், இவர்களை தங்க வைக்க கூடாது என்பதற்காக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
* கடுமையான குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் ஆகியோர், அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள சிறை வளாகத்தில் அடைக்கப்படுவர்.
* பெண்களுக்கென தனி சிறை வளாகம் உள்ளது. இங்கு, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
* 18ல் இருந்து, 21 வயதுக்குட்பட்ட இளம் வயது ஆண் குற்றவாளிகளுக்கென, தனி வளாகம் உள்ளது.
திக்... திக்... திகார் ஜெயில்
டில்லியின் சாணக்கியபுரி என்ற இடத்தில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள ஹரி நகர் என்ற இடத்தில் திகார் ஜெயில் அமைந்துள்ளது. "திகார் ஆசிரமம்' எனவும் இது அழைக்கப்படுகிறது. தெற்காசியாவிலேயே மிகப்பெரியது. 1958ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள கைதிகளுக்கு கல்வி, ஒழுக்கம், சட்ட விதிகள் உள்ளிட்ட நல்ல பண்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. திகார் ஜெயில் நிர்வாக தலைவர்களாக டைரக்டர் ஜெனரலும், அதற்கு கீழ் துணை ஐ.ஜி.,யும், அதற்கு கீழ் டி.ஐ.ஜி.,யும் உள்ளனர். பாதுகாப்பு பணியில் தமிழக சிறப்பு போலீஸ் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத் போலீஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
வரலாறு: திகார் ஜெயில் கட்டப்பட்டபோது, 1273 கைதிகள் தங்கும் அளவுக்குத்தான் இருந்தது. பஞ்சாப் மாநில நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஜெயில் 1966ல் டில்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1984, 85ல் ஜெயில் நம்பர் 1,2,3 கட்டடடங்கள் கட்டப்பட்டன. 1990ல் ஜெயில் நம்பர் 4ம், 1996ல் ஜெயில் நம்பர் 5ம், 2000ல் ஜெயில் நம்பர் 6ம் (பெண்களுக்கானது), 2003ல் ஜெயில் நம்பர் 7ம், 2005ல் ஜெயில் நம்பர் 8 மற்றும் 9 ஆகியவை கட்டப்பட்டன. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடி திகார் சிறை பொறுப்பாளராக இருந்த போது, கைதிகளுக்கு தியானம், யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை உருவாக்கினார். மேலும் திகார் ஆசிரம் என்ற பெயரை திகார் ஜெயில் எனவும் பெயர் மாற்றம் செய்தார்.
வசதிகள்: திகார் ஜெயிலில் வீடியோ கான்பரன்சிங், விசாரணை அறைகள், பாதுகாப்பு கருவிகள், சிறப்பு கோர்ட், மருத்துவமனை ஆகிய வசதிகள் உள்ளன. அடிப்படை வசதிகளான உணவு, தண்ணீர், காற்றோற்றமான இருப்பிடம் ஆகியவையும் இருக்கின்றன. கைதிகளுக்கு பயோ மெட்ரிக் (கைரேகை பஞ்ச்) பதிவேடு வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கைதிகளை சந்திக்க வருபவர்களுக்காக தினமும் 2000 பார்வையாளர்கள் அமரும் அளவுக்கு வசதிகள் உள்ளன. பார்க்க வருபவர்கள் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும். இதற்காக பிரத்யோக மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கைதிகளின் முறையீடுகளுக்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜெயில் அறைகள்: இந்த ஜெயில் 5,850 ஆண், 400 பெண் கைதிகள் உள்பட 6,250 கைதிகள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு 3,650 கைதிகளே இங்கு இருந்தனர். தற்போது கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, 12 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கைதிகளும் அடங்குவர். 12 மரணதண்டனை கைதிகளும் இங்கு உள்ளனர்.
"வி.ஐ.பி.,' கைதிகள்: சார்லஸ் சோப்ராஜ் என்னும் சர்வதேச கிரிமினல் 1986 மார்ச் 16ல் இந்த ஜெயிலில் இருந்து தப்பித்தார். சில நாட்களிலேயே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மேற்கு இந்திய சுற்றுலா பயணிகளை கடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அகமத் ஒமர் சயீத் ஷேக் என்ற கைதி பல ஆண்டுகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அசாம் மாநில அமைச்சராக இருந்த ரிபுன் போரா, 2008ல் சி.பி.ஐ.,யால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக