தமிழக அமைச்சர்களில் முதல்வர் கருணாநிதி உள்பட மொத்தம் 28 அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 9 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.முதல்வர் கருணாநிதி திருவாரூரில் வென்றார். ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி பெற்றார். பிற அமைச்சர்களான துரைமுருகன், தங்கம் தென்னரசு, மைதீன்கான், சுப. தங்கவேலன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கா.ராமச்சந்திரன், பெரியகருப்பன் ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
தோல்வி அடைந்த அமைச்சர்களில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தவர் வீரபாண்டி ஆறுமுகம்தான். அவரை அவரது சகோதரியான விஜயலட்சுமி பழனிச்சாமி, சங்ககிரி தொகுதியில், 35,079 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதேபோல மோசமான தோல்வியைச் சந்தித்த இன்னொருவர் அன்பழகன். திமுகவின் முன்னணித் தலைவரான அன்பழகன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அவரை அதிமுகவின் ஜேசிடி பிரபாகரன், 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதுவரை 8 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார் அன்பழகன். சிறந்த பேச்சாளரான அவர் 9வது முறையாக சட்டசபைக்குள் நுழைய வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு அதில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
தோல்வி அடைந்த அமைச்சர்களில் பிறர்...
கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), பரிதிஇளம்வழுதி (எழும்பூர்), தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்), க.பொன்முடி (விழுப்புரம்), கே.என்.நேரு (திருச்சி தெற்கு), என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்), எஸ்.என்.எம்.உபயதுல்லா (தஞ்சாவூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), கீதா ஜீவன் (தூத்துக்குடி), பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்), சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி),
பொங்கலூர் நா.பழனிச்சாமி (கோவை தெற்கு), உ.மதிவாணன் (கீழ்வேளூர்), தமிழரசி (மானாமதுரை), மு.பெ.சாமிநாதன் (மடத்துக்குளம்), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி).
சபாநாயகரும் காலி- துணை சபாநாயகரும் தோல்வி
அதேபோல சபாநாயகர் ஆவுடையப்பனும், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் கூட தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில், அதிமுகவின் இசக்கி சுப்பையாவிடம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.
அதேபோல துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தனபாலிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
வீழ்ந்த பெரும் தலைகள்
சிதம்பரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டயார் தோல்வியைச் சந்தித்தார்.
அறந்தாங்கியில் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவிடம் தோல்வியடைந்தார்.
சிறந்த பேச்சாளரான காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், கடையநல்லூர் தொகுதியில் அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக