லிபியாவில் சில நகரங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திரும் கிளர்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கவுன்சிலை, ஒரு அரசாங்கமாக பிரான்ஸ் ஏற்றுள்ளது. லிபியாவில் மக்கள் சிலர் இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளைக் கைப்பற்றி, அவ்வாயுதங்களைக் கொண்டு சில நகரங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அவர்களைக் கடாபியின் ஆதரவு இராணுவம் தாக்க ஆரம்பித்தவேளை, அவர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டும் என ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற, உடனடியாக அமெரிக்க, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப்படைகள் தாக்குதலை ஆரம்பித்தன. பின்னர் நேட்டோ நாடுகளும் இதில் இணைந்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து எவ்வாறு ஆயுதங்கள் கிடைக்கிறது என்று கேட்டால் எவரும் பதில் சொல்லத் தயார் இல்லை. ஆனால் அவர்கள் மேலும் பல நகரங்களைத் தாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதனை எதிர்த்து லிபிய இராணுவம் தாக்குதல் நடத்தாமல், நேட்டோ படையினர் தடுத்துவருவதோடு, லிபிய இராணுவ நிலைகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதலையும் நடத்தியுள்ளனர். தற்போது தாம் இடைக்கால கவுன்சில் ஒன்றை அமைத்திருப்பதாகவும், அதன் கொள்கைகள் என்ன என்ன என்பது தொடர்பாக அவர்கள் ஒரு கடதாசி அறிக்கையை வெளியிட, அதனை உடனடியாக பிரெஞ்சு அரசு ஏற்றுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இடைக்கால கவுன்சிலை ஒரு அரசாங்கமாக, இல்லையேல் அங்கிகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக பல நாடுகள் ஏற்றுக்கொள்ள இருக்கிறது. அதாவது டீபக்டோ(DE FACTO STATE) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது ஒரு நாட்டினுள் கிளர்ச்சியாளர்கள் அல்லது விடுதலைப் போராட்ட அமைப்பு ஒன்று ஒரு இடத்தை பல காலமாக தக்கவைத்திருந்தால், அது ஒரு தனி நாடாகப் பிரிந்துசெல்ல ஐ.நா சாசனத்தில் இடம் உண்டு. புலிகள் வட கிழக்கில் பல இடங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, எந்த ஒரு உலகநாடுகளும் அதனை ஒரு அரசாகவோ இல்லை ஆளுமைகொண்ட ஒரு அங்கமாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் லிபியாவில் சில மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் சில நகரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு உலக அங்கிகாரம் உடனே கிடைக்கிறது. இதன் பின்னணி தான் என்ன ?
தற்போது பிரெஞ்சு அரசால், கிளர்ச்சியாளர்களின் பகுதி ஒரு அதிகாரபூர்வ கவுன்சில் அல்லது அரசு என ஏற்றுகொள்ளப்படுகிறது. இதனை உலகநாடுகள் சிலவும் ஏற்றுக்கொண்டால், அப் பகுதிகள் மீது லிபியா தாக்குதலை நடத்தவே முடியாத நிலை தோன்றுவதோடு, நாடு இரண்டாகப் பிளவுபடும், நிலையும் தோன்றுகிறது. அத்தோடு இனிமேல் கிளர்ச்சியாளர்களுக்கு, வேறு நாடுகள் ஆயுதங்களையும், முடிந்தால் ஆட்பலத்தைக்கூடக் கொடுக்கலாம் என்ற நிலைதோன்றியுள்ளது. இந் நிலை குறித்து ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதானம் செலுத்துவது நல்லது. சர்வதேசத்தின் அனுசரணை எமது பக்கம் இருந்தால், அதனால் என்ன விடையங்களில் அனுகூலம் இருக்கும் என்பதனை நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அத்தோடு லிபியா விடையங்களை, தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், மற்றும் புத்திஜீவிகள் அவதானிப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக