இந்நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேர்தல் கால செயல்பாடுகள், பிரசார வியூகங்கள் பற்றியும் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க., கூட்டணிக்கு காங்., வந்துவிடும். அதற்கு பின், இவ்விரு கட்சிகளும் தனி கூட்டணி அமைக்கும்.அதன் பின் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் ஏற்படும். பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கான காரணங்களையும் அவர்கள் பட்டியலிடுகின்றனர்… கடந்த ஆண்டு, “ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் நடவடிக்கை எடுக்க தயக்கம் வேண்டாம் என்றும், இதன் மூலம் மத்திய அரசு கவிழும் நிலை ஏற்பட்டால், அரசுக்கு, அ.தி.மு.க., நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்தே, மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜா நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணம் காட்டி, மத்திய அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டே, காங்கிரஸ், அக்கட்சிக்கு கடும் நெருக்கடியை தரத் துவங்கியது. உதாரணமாக, தேர்தலுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், கீழ் தளத்தில், காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே, மேல் தளத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள், கருணாநிதியின் மகள் கனிமொழியிடமும், அவரது மனைவி தயாளுவிடமும் விசாரணை நடத்தினர்.அடுத்த நெருக்கடியாக, சட்டசபை தேர்தலில் தங்களுக்கு, 63 இடங்கள் வேண்டும்; தாங்கள் கேட்கின்ற இடங்கள் தான் வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடித்தது. இதற்கு பணியாமல், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக, தி.மு.க., மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டல் காங்கிரசிடம் போணியாகாததால், கடைசியில், காங்கிரஸ் கேட்ட, 63 இடங்களை அள்ளிக் கொடுத்தது.
அதோடு, பெரும்பான்மை பெறுவதற்கான, 118 தொகுதிகளை விட, ஒரே ஒரு தொகுதி மட்டும் கூடுதலாக, தி.மு.க., போட்டியிட்டது. இதன்மூலம், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன்தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டது.தற்போது, “ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில், கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு விட்டது. அடுத்த குற்றப்பத்திரிகையில், கலைஞர் “டிவி’யுடன் தொடர்புடைய மற்றவர்களின் பெயரும் சேர்க்கப்படும் என, கூறப்படுகிறது. இவை, காங்கிரஸ் தரப்பில் வெளிப்படையாக தெரியும் நடவடிக்கைகள். தேர்தலின்போது, தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை, தி.மு.க., கண்டித்த நிலையில், காங்கிரஸ் மவுனம் காத்தது.இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அ.தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முத்தாய்பாய், தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரசை, குறிப்பாக சோனியாவை வெளிப்படையாக தாக்கிப் பேசாமல் ஜெயலலிதா தவிர்த்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை குறை சொல்ல வேண்டிய இடங்களில் கூட, அவர் கடும் வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. “ஸ்பெக்ட்ரம்’ ஊழலுக்கு தி.மு.க., மட்டுமே காரணம் என்ற வகையில், அவரது அறிக்கைகள், பிரசார அணுகுமுறை இருந்தது. தேர்தலுக்கு பின், கூட்டணிக்குள் காங்கிரசை கொண்டு வரும் வகையில், ம.தி.மு.க.,விற்கான சீட்டுகள் குறைக்கப்பட்டு, அவர்களாகவே கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறும் நிலை உருவாக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில், ஊழல், விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, இலங்கை தமிழர் பிரச்னை போன்ற விவகாரங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டிய நிலையில் கூட ஜெயலலிதா, காங்கிரசை அதிகம் தொடாமல், தி.மு.க.,வை மட்டும் திட்டித் தீர்த்தார். இதற்கு, “நடப்பது சட்டசபை தேர்தல்’ என, வெளியே காரணம் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரசுடன் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் மறைமுக திட்டமாக இருந்துள்ளது.
அதேபோல், மயிலாப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் ஏற்பட்ட வேட்பாளர் குழப்பம் குறித்துக் கூட, அந்தந்த தொகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, ஜெயலலிதா தொடவில்லை. மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவன் போன்றோர் தன்னை குற்றம் சாட்டி பேசிய போது கூட, அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கவில்லை.தேர்தலுக்கு பிறகு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான, ஜெ., அறிக்கைகளிலும், காங்கிரசை தாக்கி எவ்வித வாசகங்களும் இடம்பெறவில்லை. மத்திய அரசையும், பிரதமரையும் விமர்சித்ததோடு ஜெ., ஒதுங்கிக் கொண்டார். சுரேஷ் கல்மாடி விவகாரம் உள்ளிட்ட, காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்திய விவகாரங்களில், அ.தி.மு.க., கண்டும் காணாதது போல் ஒதுங்கியே இருந்து வருகிறது.அ.தி.மு.க.,வின் இந்த நடவடிக்கைகள், தேர்தலுக்கு பின் தமிழக அரசியலில் கண்டிப்பாக புது அணி உருவாகும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. அந்த மாற்றத்தின்போது, அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் கண்டிப்பாக இடம்பெறும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.எது நடந்தாலும், அதை வேடிக்கை பார்க்க, எப்போதும் போல் தமிழகம் தயாராகவே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக