"சி.பி.ஐ.,யை கண்டு மற்றவர்களை போல ஒதுங்கவில்லை; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்' என, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கூறினார்.
கலைஞர், "டிவி' அலுவலகத்தில் நேற்று நடந்த சி.பி.ஐ., விசாரணைக்கு பின், கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:கலைஞர், "டிவி' நிறுவனத்திடம் சில தகவல்களை கேட்பதற்காக, சில நாட்களுக்கு முன் சி.பி.ஐ., சம்மன் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக கலைஞர், "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் சி.பி.ஐ.,யிடம் சில தகவல்கள் கொடுத்திருந்தார். அது குறித்து மேல் விவரங்களுக்காக, சி.பி.ஐ., என்னிடம் சில தகவல்களை கேட்டது. அதற்குரிய பதில்களை தெரிவித்துள்ளேன். சி.பி.ஐ., விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். சி.பி.ஐ., விசாரணை குறித்து பா.ஜ., போல் பதில் அளிக்க விரும்பவில்லை. சி.பி.ஐ.,யை கண்டு மற்றவர்களை போல ஒதுங்கவில்லை; இழுத்தடிக்கவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கிறோம்.
பதில் கிடைக்கும் வரை விசாரணை தொடரும்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பால்வாவின் நிறுவனம், "கலைஞர் டிவி'யில் முதலீடு செய்தது தொடர்பாக, நேற்று காலை சி.பி.ஐ., அதிகாரிகள், முதல்வரின் மனைவி தயாளுவிடம் விசாரித்த போது, சரத்ரெட்டியும் உடன் இருந்துள்ளார். கனிமொழியிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.ஏற்கனவே, "கலைஞர் டிவி' அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கனிமொழியிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, உரிய முறையில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதால், அந்த கணக்குகளை பெறும் முயற்சியில் தற்போது சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.பொதுவாக, பெண்களை விசாரிக்கும் போது, உடன் பெண் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும். அவர்கள் விரும்பும் இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற விதியின் கீழ், தயாளு, கனிமொழி இருவர் விருப்பப்படி, "கலைஞர் டிவி' அலுவலகத்திலேயே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன், நிராராடியாவையும் அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை குறித்து, அதிகாரிகள் கூறிய போது, "சி.பி.ஐ., தரப்பில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழுமையான பதில் ஏதும் கிடைக்கவில்லை. உண்மையான பதில் கிடைக்கும் வரை விசாரணை தொடரும்' என கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக