தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவச லேப் டாப் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் இலவச பஸ்பாஸ் பெறும் வயது 58ஆக குறைக்கப்படும் என்றார்.
திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
நான் பிறந்த இந்த மண்ணில் பெரியார், அண்ணாவை பின்பற்றி என் தோழர்களுடன் இயக்கத்தில் முழு மூச்சாக பணியாற்றிய மண்ணில் தற்போது வேட்பாளராக போட்டியிடுவது என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கொள்கைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற கூட்டணி.
அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வரும் திமுக தேர்தல் அறிக்கையில், சொன்னவற்றை நிறைவேற்றுவோம். சொல்லாதவற்றையும் நிறைவேற்றுவோம். கடந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இதற்கு எடுத்துக்காட்டு.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவச லேப் டாப் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். 60 வயதான மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி என்பது 58 வயதில் ஓய்வு பெறுபவர்களுக்கும் வழங்கப்படும்.
நான் எத்தனை முறை முதல் அமைச்சர் ஆனாலும், திருவாரூர் தொகுதியிலே வெற்றி பெற்று, எம்எல்ஏ ஆகி அதனால் முதல் அமைச்சர் ஆவேன் என்றால், அது திருவாரூர் தொகுதிக்கு பெருமை அல்ல. என்னுடைய ஊர். அது என்னை கைவிடவில்லை என மற்றவர்களிடைய கம்பீரமாக நின்று பேச, உங்களுக்காக உழைக்க என்றென்றும் தயாராக இருக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக