மஸ்கட் : ஓமன் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக ஓமனில் தங்கி ஒற்றர் வேலை பார்த்து வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் உளவு படையை பிடித்துள்ளதாக ஓமன் அரசின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பையும் இரு நாடுகளுக்கிடையான உறவில் விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்பிலிருந்தே அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து தக்க சமயத்தில் அவர்களின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்ததாக ஓமனின் அரசு செய்தி நிறுவனமான ஓ.என்.ஏ. தெரிவித்துள்ளது. அமீரகத்தின் உளவு படை ஓமன் அரசின் ராணுவ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக சுல்தான் குப்பூஸூக்கு பிறகு யார் ஆட்சிக்கு வர போகிறார் என்பதை தெரிந்து கொள்வதில் ஒற்றர் படை தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது. 1970ல் ரத்தமில்லா புரட்சி மூலம் தன் தந்தையை தூக்கி எறிந்து பதவிக்கு வந்த 70 வயதான குப்பூஸூக்கு குழந்தையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தானுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் சுல்தான் குப்பூஸ் மரணமடைந்தால் அவர் இறந்த மூன்று நாட்களுக்குள் அரச குடும்பத்தின் ஒருமித்த ஆதரவுடன் உள்ளவர் மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அப்படி ஒத்த கருத்து ஏற்படாவிடின் சுல்தான் தன் உயிலில் குறிப்பிட்டவரை ஓமன் கவுன்சில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது ஓமனின் சட்டமாகும்.
அமீரகத்தின் உளவு படை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இரு நாடுகளுக்கிடையான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவின் நட்பு நாடு என்பதும் ஓமனோ ஈரானின் நெருங்கிய கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓமனை விட்டு வெளியே அவ்வளவாக செல்லாத சுல்தான் 2008-ல் ஈரான் அதிபராக அஹ்மது நிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஈரானுக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராவர். அது போல் ஈரான் – ஈராக் போரின் போது எல்லா அரபு நாடுகளும் ஈராக்குக்கு ஆதரவாய் நின்ற போது ஓமன் நடுநிலை வகித்தது.
பிடிபட்டவர்கள் விரைவில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பின் படி தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக ஓமன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பற்றி ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக