பெங்களூர்: டிப்ளமோ படிப்பில் பெயிலான இளைஞர், தனது மனைவியின் டிகிரி மார்க் ஷீட்டை உபயோகப்படுத்தி அதை தனது மதிப்பெண் பட்டியலாக காட்டி ஐபிஎம் நிறுவனத்தில் வேலை வாங்கி விட்டார். தனது கணவரின் மோசடிச் செயல் குறித்து அவரது மனைவியே போலீஸில் புகார் கொடுத்து மாட்டி விட்டு விட்டார்.
பெங்களூரில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. நகர்பவி 2வது ஸ்டேஜ் பாபாரெட்டிப்பாளையாவைச் சேர்ந்தவர் நந்தன். இவர் பள்ளிப்படிப்பை முடித்ததும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். ஆனார். தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் அவருக்கும் லதா என்பவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பின்னர் லதாவின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிகிரி சான்றிழ்கள் அனைத்தையும் வாங்கி நந்தன்தான் வைத்திருந்தார். லதா, பி.காம் படித்தவர்.
மனைவியின் மதிப்பென் சான்றிதழைப் பார்த்த நந்தனுக்கு தவறான யோசனை தோன்றியது. லதாவின் மதிப்பெண் சான்றிதழில் அவரது பெயருக்கு மேலே தனது பெயரை பொறித்து அதை ஜெராக்ஸ் எடுத்தார். பின்னர் அதை ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் கொண்டு போய் அட்டஸ்டேஷன் வாங்கினார். பின்னர் அதைக் கொண்டு 2005ம் ஆண்டு ஹெவ்லட் பேக்கர்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு மேனேஜர் பதவி கிடைத்தது. 2007ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்தார். படித்துத் தேறினார். பின்னர் 2008ம் ஆண்டு அமிகார்ப் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டைரக்டராக பணியாற்றினார். பின்னர் 2011ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்திற்கு மாறினார். அங்கு அவருக்கு வருடத்திற்கு ரூ. 24 லட்சம் சம்பளமாகும்.
இந்த நிலையில் நந்தனுக்கும், லதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கணவரை விட்டுப் பிரிந்து போக முடிவு செய்தார் லதா. இதையடுத்து தனது டிகிரி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டார். ஆனால் அதைத் தர முடியாது என்று கூறியுள்ளார் நந்தன். இதனால் சந்தேகமடைந்த லதா போலீஸுக்குப் போய் விட்டார். போலீஸார் விசாரணை நடத்தியதில் குட்டு உடைந்தது.
இதையடுத்து மோசடிச் செயலுக்காக தற்போது நந்தனை போலீஸார் கைது செய்துள்ளனர். லதா, நந்தன் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக