இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த ஒரு கட்சியும் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்தவர்தான், ராஜபக்ச அமைச்சரவையில் அமைச்சராக உள்ள சம்பிக்க ரணவக்க.இவர்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் “ தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் நிகழும் “ என்று கூறியவர்.
இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம், நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில்.”தமிழர்களுக்கான தனி நாட்டை அடைவதற்காக நேரடி நடவடிக்கையில் தாம் ஈடுபடக்கூடும் என குறிப்பிட்டு,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் ஆற்றிய உரையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த உரையானது கோபமேற்படுத்துவதும்,ஆத்திரமூட்டுவதும், தேசத்துரோகமானதுமாகும் என்பதையும்,முப்பது ஆண்டு கால யுத்தத்திலிருந்து மெதுவாகவும், உறுதியாகவும் நாங்கள் மீளெழும்போது, அனைத்து வகையான இன குரோதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்வீர்கள்.
இதேவேளை, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் இந்தியாவில் ஆகஸ்ட் 5 ம் தேதி (டெசோ) மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக நாம் அறிகிறோம்.
தமிழர்களுக்கு தனியான தாயகம் அமைக்கப்பட வேண்டுமென பிரகடனப்படுத்துவதை இது நோக்கமாக்க கொண்டுள்ளது.துன்பமான சம்பவங்களுக்கும் பயங்கரவாத யுத்தத்திற்கு வழிவகுத்த, தனிநாடு அமைப்பதற்கான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1976 ஆம் ஆண்டு தீர்மானத்தை நாம் நினைவுகூருகிறோம்.
எமது மண்ணில் இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளை நாம் எப்போதும் அனுமதிக்கவில்லை என்பதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
நட்பு நாடு என்ற அடிப்படையில் அத்தகைய நடவடிக்கைள் இடம்பெறுவதை நாம் எப்போதும் அனுமதிக்கமட்டோம்.அதேப்போன்று இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எந்த கட்சியும் மேற்கொள்வதை தடுக்க வேண்டும்”எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக