அமெரிக்க பிரதிநிதிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதால் ஏற்பட அதிருப்தி காரணமாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரை அப்பதவியிலிருந்து நீக்க பிரதமர் யூசுப் ரஸா கிலானி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்தில் பதுங்கியிருந்தது அமெரிக்க படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றதன் மூலம் அம்பலமானது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பெயர் டேமேஜ் ஆகியிருந்த நிலையில், பின்லேடன் விவகாரமும் சேர்ந்துகொள்ள உலக அரங்கில் பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமானது.
அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான்,சரிந்துபோயிருந்த பாகிஸ்தானின் இமேஜை தூக்கி நிறுத்தும் நோக்கிலும், முக்கிய உலக நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் நோக்கிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பானி நியமிக்கப்பட்டார்.
அழகும்,வசீகரமும்,கம்பீரமும் ஒருசேர திகழும் ஹினா ரப்பானி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது உலக அரங்கை திரும்பி பார்க்க வைத்தார்.
குறிப்பாக அவர் கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, அவரது வருகை மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து இந்திய ஊடகங்கள் மிகுந்த முக்கிய்த்துவம் கொடுத்து வெளியிட்டன.குறிப்பாக ஆங்கில நாளிதழ்களும், செய்தி தொலைக்காட்சி சேனல்களும் ஹினா ரப்பானி வருகையை கொண்டாடி தீர்த்தன என்றே கூறலாம்.ஒரு ஆங்கில நாளிதழ், "டெல்லியை ஹினா புயல் தாக்கியது" என்று செய்தி வெளியிட்டது.
அந்த அளவுக்கு ஹினாவின் அழகும், வசீகரமும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்களை மட்டுமல்லாது இந்திய ஊடகங்களையும் அடித்து வீழ்த்தியது.
இது ஒருபுறமிருந்தாலும், சொந்த நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்க முடியவில்லை.காரணம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மற்றும் அதன் அண்டை நாட்டுக் கொள்கைகளை தீர்மானிக்கும் ராணுவமும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யும்தான் காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இத்தைய சூழ்நிலையில், கடந்த 4 ம் தேதியன்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் தாமஸ் நைட்ஸ் தலைமையிலான குழு, அதிபர் சர்தாரி உள்ளிட்ட பாகிஸ்தான் உயர்மாட்ட பிரதிநிதிகளை லாகூரில் சந்தித்துப் பேசியது.அப்போது வருகிற மே மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் குறித்த மாநாட்டில் பாகிஸ்தானும் கலந்து கொள்வது குறித்த பிரச்னையை எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஹினா ரப்பானி, பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான உறவுகள் குறித்து பாகிஸ்தான் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இது குறித்து முடிவெடுக்க முடியாது என்று குரல் உயர்த்தி கூறினார்.இதனால் அமெரிக்க பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அத்துடன், அதிபர் சர்தாரி முன்னிலையில் அமெரிக்க பிரதிநிதிகளிடம் ஹினா ரப்பானி அவ்வாறு பேசியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானி அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
இதனாலேயே விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்ற்த்தின்போது, ஹினா ரப்பானியை வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒருதுறைக்கு அமைச்சர் ஆக்க கிலானி முடிவு செய்துள்ளதாக இஸ்லாமபாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக