திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்ட, குடவாசல் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேரை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தினால், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடவால் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் குடவாசல் எம்.ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலர் வழக்கறிஞர் ஏ.ஆனந்தராஜ், குடவாசல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.அரசன்கோவன், குடவாசல் சண்முகம் (எ) தென்கோவன், பைங்காடு கிளைச் செயலர் சி.மகேந்திரன், மன்னார்குடி நகர மன்ற முன்னாள் உறுப்பினர் கு.பா.அறிவழகன் மன்றும் அன்புராஷ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர். கட்சித் தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். சிறையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோரை சந்தித்து, தொடர்பில் இருப்பதாக இவர்கள் மீது புகார்கள் வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக