ஏ.ஆர்.முருகதாசு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ஏழாம் அறிவு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மரின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
வேறு யாருமல்ல. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பிறந்தவர்தான் இந்த போதிதர்மர். மூன்று ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் இருந்து சைனாவுக்கு நடைபயணமாக சென்ற போதி தர்மர், மார்சியல் ஆர்ட் என்ற தற்காப்பு கலையை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தவராம். இப்போது சீனாவில் எங்கு திரும்பினாலும் போதி தர்மரின் சிலை உள்ளதாம். ஐந்து வயது சிறுவர்களிடம் கேட்டாலும் அவரைப்பற்றி சொல்கிறார்களாம். அந்த அளவுக்கு சீனாவில் தெய்வமாக மதிக்கப்படும் ஒரு தமிழர் போதி தர்மர். ஆனால் அவருக்கு காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய சிலை மட்டுமே உள்ளதாம். மற்றபடி அவரைப்பற்றிய எந்த தகவலும் இங்கிருப்பவர்களுக்கு தெரியாது. அந்த அளவுக்கு ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம் என்கிறார் சூர்யா.
கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.
ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.
புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.
அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.
போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.
மேலும் இந்த போதி தர்மருக்கு ஏழாம் அறிவு வெளியானபிறகு தமிழகத்திலும் சிலை வைப்பது குறித்து அரசு முடிவெடுக்கக்கூடும் என்றும் சொல்கிறார் சூர்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக