‘‘இதுதான் புத்தகம் மம்மி.. கிழிச்சது ...பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில பக்கங்களை கிழித்து, அடித்து, மறைத்து அழிக்கும் பணியில் 5000 ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமலுக்கு வரவிருந்தது.
ஆனால் அதிமுக அரசு வந்ததும், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சமச்சீர் கல்வி திருத்தச் சட்டம் கொண்டு வந்து, சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்தது. அரசின் முடிவை எதிர்த்து சில அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தன. விசாரித்த உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் விதத்தில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது என்று தீர்ப்பு கூறியது. அதை ஆட்சேபித்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும்; மற்ற வகுப்புகளுக்கான பாடங்களை ஆராய குழு அமைக்க வேண்டும்; அதன் அறிக்கையை 2 வாரத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அதன் மீது ஒரு வாரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை கொண்டு வரும்நோக்கில், 7 கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதில் 4 கோடியே 45 லட்சம் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட இருந்தது. புத்தகங்கள் ஏற்கனவே தொடக்க கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்களது அலுவலகம் மற்றும் அருகில் உள்ள பள்ளிகளில் பத்திரமாக வைத்திருந்தனர். தமிழக அரசு தடை போட்டதும், புத்தகம் வைக்கப்பட்டிருந்த அறைகள் சீல் வைக்கப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இரு வகுப்புகளுக்கு (1 மற்றும் 6) மட்டும் சமச்சீர் புத்தகம் வழங்க அரசு உத்தரவிட்டதால், நேற்று காலையில் சீல் அகற்றப்பட்டது. இந்த புத்தகங்களில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், திமுக கொடி வண்ணத்தில் உள்ள படங்கள், குறிப்பிட்ட சிலரின் கவிதைகள், செம்மொழி மாநாட்டு இலச்சினை படம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகளை முழுமையாக நீக்குவதுடன், சில பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, சில வரிகளை மார்க்கர் மூலம் அழித்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 69, 70, 79, 80, ஆங்கில பாடப்புத்தகத்தில் 53, 54, ஆகிய பக்கங்கள் கிழிக்கப்படுகின்றன. 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 56ம் பக்கத்தில் கவிஞர் அப்துல்ரகுமான் எழுதிய தாகம் என்ற புதுக்கவிதையை ஸ்ட்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது. 129ம் பக்கத்தில் தைத்தமிழ் புத்தாண்டே வருக என்ற பாடத்தில் 129, 130 ஆகிய பக்கங்களை முழுமையாக அகற்றி விடுகின்றனர். இப்பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியை மேற்கொள்ள தேவையான ஸ்கேல், மார்க்கர், பச்சை நிற ஸ்டிக்கர் ஆகியவற்றை அரசே வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இப்பணி இன்னும் முடியவில்லை. கடந்த ஆண்டைபோல சுமார் 1.5 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்ததால், முழுமையாக கிழிக்க முடியவில்லை. எனவே நாளையும் இப்பணி தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக