சென்னை: அமெட் பல்கலைக்கழகம் மற்றும் அமெட் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் சார்பில் ‘‘அமெட் மெஜெஸ்டி’’ என்ற உல்லாச கப்பல் தொடக்க விழா சென்னைத் துறைமுகத்தில் நேற்று நடந்தது. அமெட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜோசப் தலைமை வகித்தார். மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உல்லாச கப்பலை தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையில் இருந்து வைஸாக், போர் ப்ளேர், புகெட், லங்காவி, திரிகோணமலை, கோவா, கொச்சின் மும்பை, மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய இடங்களுக்கு செல்ல இருக்கிறது. அதன்பின் ஜி.கே.வாசன் பேசியதாவது:
இந்த கப்பல் உல்லாச பயணத்திற்கும், மாணவர்களின் பயிற்சிக்கும் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த கப்பலில் மாணவர்களுக்கு பயிற்சி மட்டும் கொடுத்தால் வருவாய் இருக்காது. அதனால், உல்லாச பயணிகள் கப்பலாகவும் செயல்படுகிறது. கடல்சார் தொழிலில் தமிழர்கள் 6 சதவீதமே உள்ளனர். உலக அளவில் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடல்சார் பணிகளில் தமிழ மாணவர்கள் அதிக அளவில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு நடத்தும் கடல்சார் கல்வி மையத்தில் 4 ஆயிரம் இடங்கள் மட்டுமே உள்ளது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல்சார் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 6 முதல் 1 ஆண்டுவரை கப்பலில் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்காக 4 பயிற்சி கப்பலை இயக்க மத்திய கப்பல் கழகம் திட்டமிட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உல்லாச பயணிகள் கப்பல்களை இயக்க சென்னை, கோவா, மும்பை, கொச்சின், மங்களூர் துறைமுகங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாவதைவிட, பொதுமக்களின் நலன்தான் முதலில் முக்கியம். சென்னை உயர்நீதிமன்ற ஆணையினை பின்பற்றுவோம். அனைவரின் ஆலோசனைகள் கேட்ட பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்.
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் தொடங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்யா மிஸ்ரா, எண்ணூர் துறைமுகத் தலைவர் வேலுமணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் நரேந்திரா, அமெட் பல்கலைக்கழகத்தின் துணை வேதர் பரத்வாஜ், துணை தலைவர் ராஜேஸ், அமெட் ஷிப்பிங் பிரவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக