அகமதாபாத்: தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி, சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். அகமதாபாத் அருகே இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
.
குஜராத் மாநிலம் படியாத்தில் பிரபலமான தர்கா உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தர்காவுக்கு முஸ்லிம்கள் யாத்திரை சென்று வருகின்றனர். பலர் பாதயாத்திரையாகவும் வருவார்கள். அகமதாபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக நேற்று காலை பாதயாத்திரையாக படியாத் தர்காவுக்கு புறப்பட்டனர். அகமதாபாத் அடுத்த டோல்கா அருகே பகோத்ரா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
பகல் முழுவதும் நடந்து களைத்துப்போன 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாலையோரம் ஓய்வெடுக்க அமர்ந்தனர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர்கள், அசதியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையோரம் படுத்திருந்தவர்களை டிரைவர் கவனிக்கவில்லை. திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரம் படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறியது. இதில் 20 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பக்தர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அகமதாபாத்தில் உள்ள வி.எஸ். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் 20 பக்தர்கள் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக