உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?
உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?
தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.
இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.
இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.
முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?
இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.
மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.
மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.
வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.
இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.
கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.
மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.
இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?
அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.
அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!
சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக