புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும் இப்போது கொலைகாரன் ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினருமான கே.பி. இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி....
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.
எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா? என்ற கேள்விக்கு கே.பி. பதிலளிக்கையில்,
திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அந்த வழியில் வந்தவர்கள் தான் அண்ணாதுரையும், கருணாநிதியும். ஆனால், திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது.
திராவிட இயக்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதன் கொள்கைகள், பிராமண எதிர்ப்பு சிந்தனைகள் போன்றவை பிரபாகரன் போன்றவர்களுக்கு தலைமுறைகள் கடந்து போய்ச் சேர்ந்து கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் பிராமண எதிர்ப்பு என்ற நிலையில் தான் தனது கொள்கைகளை வகுத்து செயல்பட்டார் பிரபாகரன்.
இதை வைத்து பிரபாகரனை மாபெரும் ஹீரோவாக்கினர் தமிழக அரசியல்வாதிகள். அவரை பண்டைய பேரரசர்களுடன் ஒப்பிட்டனர். இதனால் தான் பிரபாகரன் தவறுகள் செய்தார். ராஜிவ் காந்தி கொலையும் அது போல நடந்த ஒரு மாபெரும் தவறு தான்...
வைகோ முன்பு திமுகவில் இருந்தார். அவரும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கருணாநிதி விடுதலைப் புலிகளை தனது நலனுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார் கே.பி.
எல்லாம் சரிதான்?இந்த கே பி இப்பொது யார்? உயிருக்கு பயந்து ராஜபக்சேவின் கைக்கூலியாக மாறி கோழையாக வாழ்வது மட்டுமல்லாமல் புலிகளுக்கும், ஈழ தமிழர்களுக்கும் பச்சை துரோகத்தை செய்தவர்....செய்து கொண்டு இருப்பவர்தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக