புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பான ஐ.நா. குழு பரபரப்பான அறிக்கை வெளியிட்டவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரிஸ் டெல்லி வந்து வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சில உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை மழுங்கச் செய்ய இந்திய உதவியை பெரிஸ் கோரியதாகத் தெரிகிறது. ஆனால், போர்க் குற்றம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு இந்தியா கோரியுள்ளது. பெரிஸ்-கிருஷ்ணா வெளியிட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் இந்தக் கோரிக்கையை இந்தியா முன் வைத்தது.
இதையடுத்து சீனா சென்ற பெரிஸ் அந் நாட்டுத் தலைவர்களை சந்தித்து ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டினார்.
இந் நிலையில் இலங்கையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்கேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு.
3 நாள் பயணமாக டெல்லி செல்லும் வழியில் நேற்றிரவு சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐ.நா. சபையின் கிரிமினல் நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது.
தமிழர் பிரச்சனை குறித்து தன்னைச் சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ஜெயலலிதா என்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஓரிரு தினங்களில் அவரை சந்திப்பேன்.
இலங்கைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விஷயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
மேலும் இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தும் பணிக்காக இந்திய அரசு வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்தியா- இலங்கை வெளியுறவு துறை மந்திரிகள், செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
பின்னர் ரணில் இன்று காலை 6.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரணிலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது.
இலங்கை திரும்பும் முன் ரணில், ஜெயலலிதாவையும் சந்திக்கலாம் என்று தெரிகிறது.
இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது-ஜேவிபி எம்பி:
இந் நிலையில் இலங்கை அரசு மீது இந்தியா மிகத் தந்திரமான முறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் எம்பி அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கடந்த காலங்களில் இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பலாலி விமானத் தள விஸ்தரிப்பு, காங்கேசன் துறை துறைமுக அபிவிருத்தி போன்ற செயல் திட்டங்கள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட இலங்கையின் உரிமைகளாகும்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இந்தியாவின் ஆதரவைப் பெற டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பெரிஸின் பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் கூட இந்தியாவின் நலன்கள் தான் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்கப்பட்டு இந்தியாவுக்கு அதில் நிரந்தர அங்கத்துவம் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கையின் ஆதரவு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இந்தியா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அந்த கூட்டறிக்கையில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் அமைச்சர் பெரிஸின் பயணத்தை இந்தியா தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக