ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழத்தில் இருந்து கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் .....


மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு
நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.

எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!

தங்களுக்கு நிகர் தாங்களே தான்.

கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.

உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.

காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த “சாகும்வரை உண்ணாவிரதம்” சரித்திரத்தில் ‘பிளாட்டினம்’ எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை “சாணை” கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு ‘கூர்’மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணி;கள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த  வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.

தமிழ் கொஞ்சும்;

தமிழ் ஆனந்தம் பாடும்;

தமிழ் காதல் செய்யும்;

தமிழ் கோபப்படும்;

தமிழ் இரங்கும்;;

பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.

இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.

தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி  சென்று ‘அ,ஆ’ எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் ‘மனோகாரா’ திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது “கருணாநிதி” எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.

காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது ‘நானும்’ என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.

வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது ‘காதல்’ கொண்டவன் நான்.

தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் ‘கருணாநிதி’ தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.

பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் - அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.

எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி – திரைப்படங்களையும் காட்டி ‘கருணாநிதி’ புகழ்பாட தவறியவனல்ல நான்.

அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே...!!

எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் - விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். “கறுப்புக்” கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?

ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் ‘கண்ணாடி’ கண்டுபிடிக்கப்பட்டால்......... மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.

ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.

நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! ‘காப்பாற்றுங்கள்’ என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!

அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.

பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று “கோடி”களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.

8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, ‘பெரியாரின்’ முகாமுக்குத் தொண்டனாக வந்து, - இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் “தமிழ்ப்பணி” அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.

நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு….

எத்தனை முகங்கள்?

மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.

இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் ‘கதா’யுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.

‘உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே’ என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.

‘உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே’ என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?

“விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.

தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே…. அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.

காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. “அந்தப்புரம்” உட்பட தங்களது சகல பரிவாரங்களும்  குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.

எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.

சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை “ஏதாவது நடக்கும்” “நல்ல செய்தி வரும்” “எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்” என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை....

வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.

“கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்” “போர் நிறுத்தம்” “இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு”

“தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு”

பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான  உணர்வு எமக்கு “வெற்றி....வெற்றி..... தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்.”

குதூகலத்துடன்  கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து  பாய்ந்து வெளியே வந்தோம். 

ஆடவேண்டும்...... பாடவேண்டும்...... மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள......

வந்ததையா எறிகணைகள்.....

கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.

தொடர்ந்தும் இந்திய வனொலியில்  “கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க  வந்த தேவதை.  வெற்றி வாகை சூடி  ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்.”

இப்படியாக......... இப்படியாக......... தொடர் புகழாரங்கள்!

நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.

அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும். 

ஆனால் அவ்வளவு தான்.

நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு - மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.

எம்மால் என்ன செய்ய முடியும்?

கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.

அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. “தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன்” என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.

“ஓடினோம்…ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்.” அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் ‘கடல் - ஒரம்’. பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.

எனினும் எமக்கு...?

“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…..  ‘செந்நீரால்;;’ காத்தோம்..... கருகத் திருவுளமோ….”

ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.

356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?

கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப்  பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?

அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால்  இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!

ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?

தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.

‘தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே…’ வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!

அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே…?

அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?

கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.

பதவி விலகல் கடித நாடகங்கள்.

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.

இப்படி எத்தனை..... எத்தனை…..?

முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.

தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.

கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா…?

எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.

எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா…. பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.

கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.

ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்.....

இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்…?

இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ‘ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம்’ என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி - அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.

இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.

“தமிழீழம்”

“ரெசோ”

என்ன இவை....? வரலாற்று நாடகங்களா..?

இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.

உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ‘ரெசோ’ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை..... சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

“உண்ணாவிரத” நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. “மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!”

அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு..... பிசுபிசுப்பு.....! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.

முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.

அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே….? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா….?

உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.

நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்..... எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.

இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் ‘கஜானா’ விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் - கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.

தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.

ஏனெனில் நாம் மனிதர்கள்.

எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.

ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்......

எம்மை வாழ விடுங்கள்.



இவ்வண்ணம்

நேர்மையுடன்

ஈழத்தமிழ் அகதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக