கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற வார்த்தைகளை அடிக்கடி மேடைதோறும் முழங்கும் தி.மு.க.வினர் தற்போது வழக்கு-சிறை-ஜாமீன் என்ற வார்த்தைகளைப் பேசுவதில் பிசியாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது பற்றிய second thought ஒன்று தி.மு.க.வில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கட்சித் தலைவர் கலைஞரே, இம்முறை உள்ளாட்சித் தேர்தல்களை புறக்கணித்தால் என்ன என்ற ரீதியில் பேசத் தொடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் உடன்பிறப்புகள். தலைவரின் இந்தப் பேச்சு, தொண்டர் மட்டத்தில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் என்பது லோக்கல் கட்சிக்காரர்களின் செல்வாக்கை நிர்ணயிக்கிற தேர்தல். அவர்களை உற்சாகப்படுத்தி கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க சின்னச் சின்ன பதவிகள் கொடுக்கும் வாய்ப்பு அது. அதையும் தவறவிட்டால், தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள் என்ற வாதம் சில கட்சிக்காரர்களால் முன்வைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், தலைமை அதை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றது என்பதே தற்போதைய நிலைமை என்று தெரியவருகின்றது. தேர்தலைப் பகிஷ்கரிப்பதையே கலைஞர் தனது பிளான்-1 ஆக வைத்துள்ளார் என்கிறனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கலைஞரின் பிளான்-1 நிறைவேற்றப்பட்டால், நிச்சயம் தொண்டர்களை அதிர வைக்கும்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விஷயங்களைக் கவனிக்க தி.மு.க. தலைமைக் கழகத்தில் நிர்வாகிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்ற கருத்துக்களை அந்தக் குழுவிடம் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று, கட்சியில் பொறுப்புக்களில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுக்குழு கோவையில் கூடுவதற்கு முன்னரும், மாவட்டச் செயலாளர்கள் விஷயத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்துக்களை நிர்வாகிகள் குழுவிடம் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அதற்காக ஆயிரக் கணக்கான தி.மு.க.வினர் தமது கருத்துக்களை எழுதிக் குவித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக