கடந்த 29ம் தேதி சமச்சீர் கல்வி விவகாரத்தை வலியுறுத்தி மாணவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது திமுக. இதில் திருவாரூர் மாவட்டம் கொறடாச்சேரியில் நடந்த போராட்டத்திற்காக மாணவர்களை திமுகவினர் அழைத்து வந்தனர். அதில் ஒரு மாணவன் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் உயிரிழந்தான்.
இதையடுத்து மாணவர் மரணத்திற்குக் காரணமாகஅமைந்ததாக கூறி கடந்த சனிக்கிழமை அன்று திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் கலைவாணனை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி பூண்டி கலைவாணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினம்தோறும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பூண்டி கலைவாணன் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அவர் விடுதலையாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பூண்டி கலைவாணன் மீது இன்னொரு வழக்கைத் தொடர்ந்துள்ள போலீஸார் அந்த வழக்கில் இன்று அவரைக் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற அதிமுக பிரமுகரின் டீக்கடையை அடித்து நொறுக்கியதாக கலைவாணன் உள்ளிட்ட 8 பேர் மீது திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள கலைவாணன் உள்ளிட்டோரை இன்று திருத்துறைப்பூண்டி கோர்ட்டுக்குக் கொண்டு வந்து போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் கலைவாணன் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக