ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பான் கீ மூனுடனான சந்திப்பின் பின் மகிந்தவைக் காப்பாற்ற ரணில் முடிவு!


சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு மகிந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.  சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது.
தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே ரணில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பில் பான் கீ மூனின் பிரதம தலைமை அதிகாரி விஜே நம்பியாரும் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், விஜே நம்பியார் இச்சந்திப்பில் கலந்துகொண்டதை ஐ.நா. உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்காவுக்கான முன்னாள் சிறீலங்காத் தூதுவர் டேவிந்த சுபசிங்க பங்கேற்றிருந்தார். இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து உடனடியாகத் தெரியவராதபோதும், மகிந்த அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுவரும் எதிர்ப்புக்களைத் தணிப்பதற்கும், சிறீலங்காவை பொருளாதார நெருக்கடிகளில் இருந்த காப்பாற்றுவதற்குமாகவுமே ரணில் விக்கிரமசிங்க இந்தப் பயணத்தை மேற்கொண்டு பான் கீ மூனுடனான சந்திப்பை மேற்கொண்டது உறுதியாகியுள்ளது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எனவே, சர்வதேச சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பொறுப்புக் கூறுவதற்கான கால அவகாசத்தை மகிந்த அரசிற்கு வழங்க ஐ.நா. பொதுச்செயலர் முன்வரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு எதிர்பார்த்தளவிற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகின்றது.
போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பொறுப்புக் கூறுவதற்கான கால அவகாசத்தை கொழும்புக்கு வழங்க இணக்கம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலர், இப்பொறுப்புக் கூறலுக்கு கால வரையறையற்ற வகையில் அவகாசம் வழங்க முடியாது எனவும் ரணிலிடம் உறுதியாகக் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கைகள் மகிந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பான் கீ மூன் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்பதிகரமானதாக இல்லை எனவும் அவர் கூறியதுடன், போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள கவலைககள் குறித்தும், போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மட்டுமல்ல, இலங்கையின் மனிதவுரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவை தொடர்பிலும் ஐ.நா. கவலை கொண்டிருப்பதாகவும் பான் கீ மூன் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, செப்டெம்பர் மாதம் சிறீலங்காவின் மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இச்சந்திப்பின்போது பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டாம் எனவும் பான் கீ மூனிடம் ரணில் கோரியதாக தெரியவருகின்றது.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பகுதி மேற்கு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், எனவே பொருளாதார தடை விதிக்கப்பட்டால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும் அத்துடன், இலங்கையர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில் தடைகள் மேலும் அவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எனவே இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரச்சினை மாத்திரமல்ல இலங்கை மக்கள் அனைவரினதும் பிரச்சினையாக உருவெடுக்கும் எனவும் ரணில் பான் கீ மூனிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது. எனினும், இந்தக் கோரிக்கைக்கு பான் கீ மூன் என்ன பதிலினை வழங்கினார் என்பது தெரியவரவில்லை.
இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட தமிழர்க்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா.வோ அல்லது ஆர்வம் கொண்ட நாடுகளோ சிறீலங்கா அரசாங்த்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லையென்றும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் உரிமை மீறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டுக்கான நடவடிக்கைக்கு எதிரணி தயாராக இருந்ததாகவும் பான் கீ மூனிடம் ரணில் எடுத்துக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பான் கீ மூன், மகிந்த அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் போதாது என்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் தரப்பிலிருந்து மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதுவரையான செயற்பாடுகள் திருப்தி இல்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே, இலங்கை தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் கவலைகளுக்கு தீர்வு காண்பதில் காலவரையறை இருக்கும் என்றும், ஐ.நா.வினாலோ அல்லது அதற்கு வெளியேயோ இலங்கை விவகாரம் இலகுவாக மறைந்துவிட முடியாது என்றும் பான் கி மூன் ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் நிபுணர் குழு அறிக்கைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று ரணில், பான் கீ மூனிடம் கேட்டபோது, இதுவரை தாங்கள் தீர்மானிக்கவில்லையென்று ஐ.நா. செயலர் பதிலளித்துள்ளார். அதேவேளை, சிறீலங்காவின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கை சம்பந்தமாக மேற்கொள்ளவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் பரிசீலனை செய்து வருகின்றார் என்று ஐ.நா.சபை தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டது. இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆராய்ந்து வருகிறார். அந்த அடுத்த கட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்படும் அது தொடர்பில் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றார்.
இதேவேளை, பான் கீ மூனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் பர்ஹான் ஹக்கிடம் கேட்டபோது, அதுபற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.
இதேவேளை, ஐ.நா. மகிந்த அரசின் மீது இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதை இந்தச் சந்திப்பின் ஊடாக உணர்ந்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பயவுடன் மகிந்த அரசிற்கான தமது கட்சியின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில்லை என்று அறிவித்திருந்தது ஐக்கிய தேசியக்கட்சி. ஆனால், இந்தப் பயணத்தின் பின்னர் அந்தக் குழுவில் பங்குபற்றவும் தமது கட்சி தயார் என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான அரசின் பேச்சுக்கள் தொடர வேண்டும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு வழங்கும் என்றும் மகிந்தவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக ரணில் அறிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையானது எதிர்மறையான தாக்கத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளை கவனத்தில் எடுக்க வேண்டிய தேவை மட்டுமன்றி முழு நாட்டையும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டிய விடயங்களை இந்த அறிக்கை தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டுசென்றிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான தனது பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி ராஜபக்சவுக்குதான் தெரிவிக்கவுள்ளதாகவும், ஐ.நா.வுடன் மகிந்த அரசாங்கம் மேலும் நெருக்கமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய தேவை குறித்து இதன்போது தான் வலியுறுத்துவேன் என்றும் ரணில் மேலும் கூறியுள்ளார்.
இனப்படுகொலையின் போர்க் குற்றங்களில் இருந்து மகிந்த அரசைக் காப்பாற்ற கட்சி வேறுபாடுகளின்றி சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி கூட ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், தமிழ் ஒட்டுக்குழுக்களும், அடிவருடிகளும் சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்ற தொடர்ந்தும் அடிபணிவு அரசியலை மேற்கொண்டு வருவதும், அதற்கு மற்றையவர்களைத் தூண்டுவதும் அதிர்ச்சியளிக்கத்தக்கவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக