புதிய தலைமைச் செயலகத்தைத் தவிர்ப்பது ஏன்? ஜெயலலிதா விளக்கம்
அரசு தலைமைச் செயலகமாக செயல்படுவதற்கு புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தைத் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.சட்டசபை செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையைத் தேர்ந்தெடுத்ததில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபைக் கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை. கட்டடப் பணிகள் நிறைவு பெறாமலேயே அவசரம் அவசரமாக துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது. 19.3.2010ல் புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்றத் தரையில் புதிய தரைவிரிப்புதான் போடப்பட்டிருந்தது. கேலரி உள்ள முதல் மாடி முடிக்கப்படாமல், பெரிய திரைச்சீலை ஒன்றால் சுவர்கள் மறைக்கப்பட்டு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேலும், அப்போதைய அரசில் அனைத்து அமைச்சர்களின் துறைகளும் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படாமல், முந்தைய அரசு இரண்டு கட்டிடங்களிலுமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கட்டிடத்தின் மேல் மாடிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு வணிகர்களும், புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களும், ரிச்சி தெரு மின்னணு சாதன வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கடைகள் விரைவில் அங்கிருந்து காலி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வந்துள்ளனர். எனவே, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இயங்குவதற்கு வசதியாக அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள பழைய புனித ஜார்ஜ் கோட்டையையே மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் தேர்தல் வாக்குறுதிகளை கூடுமான வரையில் நிறைவேற்ற வசதியாக, அனைத்து அரசு அலுவலகத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையே வசதி என்பதால், அதையே தேர்ந்தெடுத்துள்ளோம் என்று முதல்வர் ஜெயலலிதா இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக