தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு பாதுகாப்பு குறித்த உள்துறை அமைச்சர்களிடையிலான பேச்சுவார்த்தைக்கு வந்த அமெரிக்க
: பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பயன்படுத்தி ஊக்குவித்து வருகிறது பாகிஸ்தான் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டினார்.இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் அமெரிக்க உள்துறை அமைச்சர் ஜேனட் நபோலிடனோ பங்கேற்றார். அதிபர் பராக் ஒபாமா அமைச்சரவையில் ஹிலாரி கிளிண்டனுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகாரம் பெற்ற உள்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் சிதம்பரம் பேசியது:பயங்கரவாத கட்டமைப்புகளை ஊக்குவிப்பதை நாட்டின் முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ள இந்த நாடு இந்தியாவின் அண்டை நாடாக அமைந்துள்ளது சிக்கலானது.இத்தகைய சூழலில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். உண்மையில் சொல்லப்போனால் எங்களுக்கு அண்டை நாடாக அமைந்துள்ள பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் மோசமான அண்டை நாடு என்றால் மிகையாகாது.பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்ப்பதன் மூலம் ஸ்திரமான, அமைதியான, வளமான அண்டை நாடு உருவாகி அதன் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகும்.ஆனால் சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் உருவாகும் இடமாகவும், உலக பயங்கரவாதத்தின் மையமாகவும் இந்தியாவின் பக்கத்து நாடு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளை செய்து தருவது அந்நாட்டு கொள்கையாகவே உள்ளது. இதுபோன்ற நிலைமையை சமாளிப்பது எளிதானதல்ல. இந்த பிரச்னை இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பிரதான பிரச்னைதான் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.கள்ள நோட்டுப் புழக்கம், போதைப் பொருள் கடத்தல், கம்ப்யூட்டர் மூலமான தகவல் திருட்டு உள்ளிட்ட அச்சுறுத்தல்களும் புதிய பிரச்னைகளாக வளர்ந்துள்ளன.பாகிஸ்தானை முகாந்திரமாக கொண்டு பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இதிலிருந்தே அந்நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது என்பதை உணரலாம். பயங்கரவாத செயல்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதார பலம் சரிவடைந்து வருவதுடன் ஸ்திரமற்ற நிலையும் நிரந்தரமாகி வருகிறது. மேலும் அரசு என்கிற அமைப்பும் நொறுங்கிவருகிறது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா ஒருங்கிணைந்த அரசியல் அணுகுமுறையை கடைபிடிக்கிறது.அந்நாட்டில் ஸ்திரமான அரசியல் சூழல் நிலவவும், பொருளாதார மேம்பாட்டுக்கு உதவவும், வர்த்தக உறவை மேம்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளது. பக்கத்து நாட்டில் அமைதியும், வளமும் நிலவுவது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அப்போதுதான் இந்திய மக்களும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.இந்தியா, அமெரிக்கா இடையிலான உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என ஜேனட்டிடம் குறிப்பிட்ட சிதம்பரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பில் அரசியல் ரீதியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு இரு நாடுகளிடையிலான பரஸ்பர மதிப்பு, புரிந்துகொள்ளுதல் அவசியமாகும். பரஸ்பர வளர்ச்சியில் இரு நாடுகளும் முக்கிய கவனம் செலுத்துகின்றன என்றார் சிதம்பரம்.மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுவதை பாராட்டிய சிதம்பரம், அனைத்துவித சவால்களிலும் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைக் காக்க இரு நாடுகளும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது, தடயவியல் சோதனை முடிவுகளை பகிர்ந்துகொள்வது, பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்வதாக சிதம்பரம் குறிப்பிட்டார்.இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் உள்துறைச் செயலர் மற்றும் அமெரிக்காவின் உள்துறை இணையமைச்சர் ஆகியோர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யலாம் என்று ப. சிதம்பரம் கூறினார்.2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரம் அமெரிக்காவில் பயணம் செய்தபோது இரு நாடுகளிடையிலான உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இப்போது ஜேனட் இந்தியா வந்து இது குறித்து பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக