பிரபல இந்தி நடிகை லைலாகான். பாகிஸ்தானில் பிறந்த இவர் மும்பையில் பெற்றோர் சகோதரியுடன் தங்கி இந்திப் படங்களில் நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் லைலாகான் திடீர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் லைலாகானை திருமணம் செய்தவர் மும்பை குண்டு வெடிப்பில் தேடப்படும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என தெரிய வந்தது. இதனால் லைலாகானிடம் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்தனர்.
அதன் பிறகு திடீர் என்று லைலாகானும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரியும் மாயமாகி விட்டார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டதாக மும்பையில் பரபரப்பு வதந்தி பரவியது. ஆனால் மும்பை போலீசாரால் அதை உறுதி செய்ய முடியவில்லை.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த பர்வேஸ் அகமத் தக் என்பவன் மும்பை போலீசில் பிடிபட்டான். அவனிடம் போலீசார் லைலாகான் பற்றி விசாரித்தபோது, லைலாகானும் குடும்பத்தினரும் போலி பாஸ் போர்ட்டில் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாகவும் அங்கு அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தான். ஆனால் லைலாகான் உயிருடன் இல்லை. கொலை செய்யப்பட்டது உண்மை என்று காஷ்மீர் போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுபற்றி ஸ்ரீநகரில் காஷ்மீர் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நடிகை லைலாகான், அவரது தாயார் சலீனா பட்டில், சகோதரி ஆஸ்மினா பட்டில், வளர்ப்பு தந்தை ஆசிப் ஷேக் ஆகியோருடன் மும்பையில் வசித்து வந்தார். அவர்கள் மாயமாகி விட்டதாக லைலாகானின் தந்தை நதிர்ஷா பட்டில் மும்பை போலீசில் புகார் செய்து இருந்தார். லைலாகான், தாயார், சகோதரி, வளர்ப்பு தந்தை ஆகிய 4 பேரும் மும்பையில் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவலையடுத்து மும்பை தீவிரவாத தடுப்பு போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். தனது நெருங்கிய கூட்டாளியை லைலாகான் திருமணம் செய்ததால் தங்களை காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் தாவூத்இப்ராகிம் கும்பல் அவர்களை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதில் லைலாகானை திருமணம் செய்தவர் கதி என்ன? என்பது மர்மமாக இருக்கிறது. லைலாகான் கொலை செய்யப்பட்ட தகவல் மும்பை சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக