திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீண்டும் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை அறிவித்தார்.
இத் தொகுதியில் அக்டோபர் 13-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரியம்பிச்சையை எதிர்த்துத் தோல்வி அடைந்தவர் நேரு.
பின்னர், திருச்சியில் கலைஞர் அறிவாலயத்துக்கு நிலம் பறித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் இத் தொகுதியில் பரஞ்சோதி போட்டியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் இத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன.
மனு தாக்கல் தொடக்கம்: இத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கிவிட்டது. முதல் நாளில் இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. சம்பத் வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
124-வது முறை வேட்பு மனு: முதல் வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளர் கே. பத்மராஜன், மக்கள் சக்தி (லோக் சத்தா கட்சி) வேட்பாளர் எஸ். சுரேஷ் குமார் ஆகியோர் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கே.பத்மராஜன் 124-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 பொதுத் தேர்தல் வாக்கு விவரங்கள்:
என். மரியம் பிச்சை (அதிமுக)—- 77,492
கே.என். நேரு (திமுக)—- 70,313
வாக்குகள் வித்தியாசம் ——- 7,179
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக