இப்படி தான் தி .மு .க ஆரம்பத்தில் பேசியது
சென்னை: ""தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.சட்டசபையில், மேலவை வேண்டாம் என்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:கடந்த, 1986ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சட்ட மேலவையை நீக்கும் தீர்மானம், இந்த சட்டசபையில் நிறைவேறியது. பின், இத்தீர்மானம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஏற்கப்பட்டு, தமிழக சட்ட மேலவையை நீக்கும் சட்டம், 1986, ஆகஸ்ட் 30ம் தேதி அங்கீகரிக்கப்பட்டு, அந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.எம்.ஜி.ஆர்., நிறைவேற்றிய அந்த சட்டத்திற்கு எதிராக, 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேலவையை தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றினோம். 1996ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும், மேலவையை கொண்டு வர முயற்சித்தது. 2001ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.கடந்த, 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, சட்ட மேலவையை கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, அதற்கான சட்டத்தையும் இயற்றியது. எனினும், சட்ட மேலவைக்கான தொகுதி வரையறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் தடையாணை பிறப்பித்துள்ளதால், மேலவை தேர்தல் நடைபெறாத சூழல் தற்போது உள்ளது.
மேலவை தேவை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்வர், "அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனைகளை கூறும் வகையில், சட்ட மேலவையை விரைவில் கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டார்.இப்போதுள்ள சட்டசபையிலேயே வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றோர் இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களும், இங்கு இடம் பெற்றிருக்கின்றனர்.சாமானியர்களையும் சட்டசபை உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க., தான். அப்படியிருக்கும்போது, சட்ட மேலவையை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
இந்த தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில், மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவர் மகன் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மற்றொரு மகன் அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன. மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி.குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுபவர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், சட்ட மேலவையை தி.மு.க., கொண்டு வந்ததே தவிர, பல தரப்பட்டவர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல.கடந்த ஆண்டு மேலவை தொடர்பான விவாதத்தில், செங்கோட்டையன் பேசும்போது, "இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் இதைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன?' என கேட்டதற்கு, "இது யாருக்கு கடைசி காலம் என்பதை, நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்' என, கருணாநிதி கூறியிருக்கிறார். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம், சட்ட மேலவை தேவையில்லை என்று மக்களும் ஆமோதித்திருக்கின்றனர்.
நாட்டில் உள்ள, 28 மாநிலங்களில், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான், சட்ட மேலவை உள்ளன. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில், சட்ட மேலவை கிடையாது. இதிலிருந்தே, மேலவை வேண்டும் என்ற கருத்து, எந்தளவிற்கு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை அறியலாம்.முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரும், ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை என கருதப்படும் மேலவை தேவையற்றது என, திட்டவட்டமாக கூறியுள்ளனர். அவர்கள் வழியை பின்பற்றி, மேலவை தேவையில்லை என்ற தீர்மானத்தை, உறுப்பினர்கள் முன் வைத்தோம். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, "இனிமேல் மேலவை வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுங்கள்' என்றார்.எனக்கு தெரிந்தவரை, மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க., தான். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன், அஸ்தமனமானது தான்; இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது; உதிக்கவே உதிக்காது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக