புதுடெல்லி: பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. ஆனால், இன்னும் 3 வாரத்துக்கு பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்கான பாட புத்தகங்களை ஆராய்ந்து அறிக்கை தர புதிய நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதி மன்றம்
உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 வாரத்துக்குள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் கல்வித் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் கல்வி முறைகளை கலைத்துவிட்டு, பொதுவான ஒரு கல்வி முறையாக, சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த திமுக அரசு கொண்டு வந்தது.
புதிதாக பதவி ஏற்ற அதிமுக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து கடந்த வாரம் சட்ட திருத்த கொண்டு வந்தது. அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோன்மணியம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர், ‘சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை நிறுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்‘ என்று கூறி, சமச்சீர் கல்வி திருத்த சட்டத்துக்கு தடை விதித்தனர்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு, மனோன்மணியும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசுக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் நிர்வாகிகள் சார்பில் பி.டி.அரசகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற விடுமுறைகால நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, “ சமச்சீர் கல்வித் திட்டத்தில் பாடங்கள் தரமானவையாக இல்லை.
இந்த கல்வியைப் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற முடியாது“ என்று வாதிட்டார்.சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மனுக்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷண், கங்குலி ஆகியோர், “4 வகையான பாடத்திட்டங்களால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும். காலதாமதம் செய்வதால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:
* சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, அதன் பாடத்திட்டங்களைக் கொண்டு கடந்த 2010-2011ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போல் 2011-2012ம் கல்வி ஆண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரு வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம்தான் இந்த ஆண்டும் தொடர வேண்டும்.
* மற்ற அனைத்து வகுப்பு பாட புத்தகங்கள் குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.
* தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் இந்த குழுவில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தைச்(என்.சி.இ.ஆர்.டி) சேர்ந்த 2 பேர், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் 2 பேர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், மாநில அரசு சார்பில் 2 பேர் ஆகிய 9 பேர் அந்த குழுவில் இடம்பெற வேண்டும்.
* இந்த நிபுணர்கள் குழு பாடத்திட்டத்தை 2 வாரங்களுக்குள் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் மீது, நாள்தோறும் விசாரணை என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
* அதுவரை 3 வாரகாலத்துக்கு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு எந்த பாடத்திட்டமும் இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
1, 6ம் வகுப்புகளுக்கு புத்தகம் விநியோகம் எப்போது?
ஏற்கனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்தில் அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்களும் ஏற்கனவே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளதால் 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசுத் தரப்பிலிருந்து உரிய உத்தரவு வந்தால்தான் 1 மற்றும் 6ம் வகுப்புக்கான புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 , 7ம் வகுப்பு மாணவர்களின் நிலை?
கடந்த ஆண்டு சமச்சீர் கல்வி பயின்ற 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் இந்த ஆண்டு 2 மற்றும் 7ம் வகுப்புக்குச் செல்கின்றனர். அவர்களின் கல்வித் திறனுக்குத் தக்கவாறுதான் 2 மற்றும் 7ம் வகுப்பு பாடத்திட்டங்கள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களுக்கு வேறு பாடத்திட்டம் கொண்டு வந்தால் அவர்களால் அவற்றை முழு அளவில் புரிந்துகொள்ள முடியுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் குழப்பம்!
மூன்று வாரங்களுக்கு எந்த பாடமும் எடுக்கக் கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மாணவர்களுக்கு எந்த பாடத்தை நடத்துவது என்றே தெரியவில்லை. ஏற்கனவே, பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 3 வாரங்கள் காத்திருப்பதால் மாணவர்களின் வருகைப் பதிவிலும் சிக்கல் ஏற்படும். மாணவர்களைவிட எங்களுக்குத்தான் அதிக தலைவலி என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் 10ம் வகுப்பு மாணவர்கள்தான். இந்த ஆண்டு சமச்சீர் கல்வி பிரச்னையால் ஏற்கனவே பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மேலும் 3 வாரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோடை விடுமுறையின்போது சமச்சீர் கல்வி பாடத்தை படித்த மாணவர்கள் அரசின் முடிவால் மீண்டும் பழைய பாடத்திட்டத்தை படிக்க ஆரம்பித்தனர். இதனால், எந்த பாடத்தை தேர்வு செய்வது என்று 10ம் வகுப்பு மாணவர்கள் கவலையில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக