டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது விருப்பமாகக் கூறியுள்ள, “கனிமொழியை தீபாவளிக்காவது சென்னைக்கு அழைத்துச் செல்லத் துடிக்கிறேன்”, எந்தளவுக்குப் பலிக்கும் என்பது தெரியவில்லை. நாளை (திங்கட்கிழமை) சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு பற்றிய ஹியரிங் வரவுள்ளது.
ஜாமீன் மனு கோர்ட் பெஞ்சுக்கு வரும் முன்னரே, நேற்று சனிக்கிழமை சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை என்று கோர்ட் ஏற்றுக்கொண்டு விட்டது. இதன் பாதிப்பு நாளை ஜாமீன் மனு ஹியரிங்குக்கு வரும்போது நிச்சயம் இருக்கப்போகின்றது.
திங்கட்கிழமை ஜாமீன் மனு நீதிபதிக்கு முன்னால் வைக்கப்படுவதற்கு முன், சூழ்நிலையைச் ‘சரிசெய்து’ விடவேண்டும் என்ற டெஸ்பரேஷனில் இருக்கிறார் கலைஞர். புதுடில்லியில் முகாமிட்டு சந்திக்க வேண்டியவர்களை அவரே நேரில் சந்திப்பதும், இதனால்தான்.
காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்தித்த அவர் பிரதமரையும் சந்தித்திருக்கிறார். உட்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்திருக்கிறார். தன்னுடைய மாக்ஸிமம் முயற்சியை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டுவிட்டார்.
இந்தக் கட்டத்திலும் சறுக்கினால், கனிமொழி குறைந்தபட்சம் 7 வருடங்கள், அதிக பட்சம் ஆயுள் தண்டனை பெற வேண்டியிருக்கும்! இதை அவரது தரப்பு வக்கீல்களே அவருக்கு விளக்கமாகக் கூறிவிட்டனர்.
காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்திக்க கலைஞர் சென்றபோது, கூடவே ராசாத்தி அம்மாளையும் அழைத்துச் சென்றிருந்தார். ஒரு பெண்ணின் ஜாமீன் கோரிக்கை தொடர்பாக, மற்றொரு பெண் தலைவியிடம் கோரிக்கை வைக்கச் செல்லும்போது, மற்றொரு பெண்ணை அழைத்துச் செல்லும் சென்டிமென்டல் டச் அது.
சோனியா காந்தி முன்னிலையில் நிச்சயம் ராசாத்தி அம்மாள் கண்ணீர் சிந்தியிருப்பார் என்பதை ஊகிக்கலாம்.
கண்ணீர் எந்தளவுக்கு வேலை செய்யும் என்பது, நாளை தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக