ஐக்கிய நாடுகளின் சபையில் பாலஸ்தீனத்திற்கான அங்கத்துவ உரிமைக் கோரிக்கையை பாலஸ்தீனத்தின் தலைவர் முகமட் அபாஸ் முன்வைத்துள்ளார்.
நான் இஸ்ரேலுக்கு கூறவிரும்புவது சமாதானத்திற்கு வாருங்கள் என தனது பேச்சை அவர் ஐநாவின் பிரதான சபையில் ஆரம்பித்திருந்தார்
.
ஐக்கியநாசபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்படுத்திய பாரிய அழுத்தங்கள் மற்றும் அரசியல் காய்நகர்த்தல்களையும் மீறி அபாஸ் பாலஸ்தீனத்தின் அங்கத்துவக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இன்றுள்ள 193 நாடுகளுடன் பாலஸ்தீனத்தை 194 ஆவது நாடாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இக்கோரிக்கை உள்ளடக்குகிறது.இக்கோரிக்கை நேற்று ஐநாவின் பிரதானசபையில் முன்வைக்கப்பட்ட போதிலும் இது தொடர்பான வாக்கெடுப்பு பாதுகாப்புச்சபையிலே நிகழ்த்தப்படும். ஆனால் அங்கத்தவநாடுகள் இப்பிரேணைக்கு எதிராக தமது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்பதும் அத்தோடு அமெரிக்கா தனது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருந்தும் அபாஸ் இதையிட்டு எதுவித தயக்கத்தையும் காட்டவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளாக பாலஸ்தீன தலைவர்கள் தமது சக்திக்குட்பட்ட வகையில் அமெரிக்காவினதும் ஏனைய ஏகாதிபத்தியங்களினதும் அரசியல் தந்திரோபாயம் மிக்க பேச்சுவார்த்தைகளுக்கு தம்மாலான ஒத்துழைப்பையும் வழங்கிவந்திருந்தும் இவைகள் எதுவும் பாலஸ்தீனமக்களுக்கு நிரந்தரமான விடிவை ஏற்படுத்தவில்லை. ஆனால் மாறாக இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் அதிகரித்துவரும் குடிப்பரம்பல் மேலும் பாலஸ்தீனமக்களின் நிலப்பரப்புக்களைப் பறிப்பதாக அமைந்துள்ளது
1993 இல் ஒஸ்லோ ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. மேற்குக்கரை மற்றும் காஸா கரைப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் பாலஸ்தீனத்தின் சுயாட்சியை இது உறுதி செய்திருந்தது. 2000 ஆண்டில் இஸ்ரேலிய பிரதமர் ஏகூட் பாராக் மேற்குறிப்பிட்ட இரு பகுதிகளின் பெரும்பகுதியில் சுயாட்சி உரிமையை வழங்கியிருந்தார். ஆனால் 2001 ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவர் தோல்வியைத் தழுவியதும் இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.
2003 இல் மத்தியகிழக்கு முரண்பாடுகளிற்கு தீர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஒத்துழைப்பதற்கான கூட்டமைப்பைச் (Diplomatic Quartet) சேர்ந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சமாதானத்திற்கான ஓர் வரைபை முன் வைத்திருந்தன. எந்த முன்னேற்றத்தையும் இது ஏற்படுத்தியதாக தெரியவில்லை.
2007 இல் அமெரிக்காவில் இஸ்ரேலிய பிரதமரும் பாலஸ்தீன தலைவரும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருகின்றனர். 2008 ஆம் ஆண்டிற்குள் இருநாடுகளுக்கும் இடையே நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்காக உழைப்பதாக உறுதிக் கூறிக் கொண்டனர். ஆனால் அடுத்த கணமே இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பாலஸ்தீனத்தின் மீது பாரிய தாக்குதலை மேற்கொள்கிறது.
2010 இல் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தலியாகூவிற்கும் பாலஸ்தீன தலைவருக்குமான பேச்சுவார்த்தை எகிப்தில் நடைபெற்ற போதிலும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பை மீளக் கையளிக்க வேண்டும் எனவும் மேற்குகரையில் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் இதுவும் முறிவடைந்து போனது.
ஐ.நாவின் பாதுகாப்புச்சபையில் அங்கத்துவம் கோருவது பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக நிரந்தர சமாதானத்தை வழங்காத போதிலும் ஐநாசபயையில் அங்கத்துவம் கோருவதன் மூலம் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பான விழிப்புணர்வை சர்வதேசமூகத்தின் முன்னிலையில் கொண்டு வருவதற்கான வாய்ப்பினை இது ஏற்படுத்துகிறது.
ஒரு சில வல்லரசுகளினது அரசியல் சதுரங்க காய் நகர்த்தலுக்குள் அகப்பட்டு மேலும் பல ஆண்டுகளை விரயமாக்காது இவ்விடயத்தை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்துவதானது அமெரிக்காவின் மத்திய கிழக்கு முரண்பாடுகள் தொடர்பான கருத்தை வெளிப்படையாக முன்வைக்க கோருவதாக அமையும். ஐநா சபையில் அவதானிகள் நிலையில் இருக்கும் பாலஸ்தீனம் அங்கத்துவ உரிமையைப் பெறும் பட்சத்தில் இஸ்ரேலின் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் வாய்ப்பை பாலஸ்தீனம் பெறுகிறது
இதுவரை காலமும் பிரித்தானியா, அமெரிக்கா, அமெரிக்கா சார் நாடுகளில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் இவ்ஏகாதிபத்தியங்களின் கைகளிலிருந்து விலகி சர்வதேச ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு பரிமாறப்படலாம். இது சிலவேளைகளில் பாலஸ்தீனமக்களுக்கு சாதகமான முடிவையும் ஏற்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக