நெல்லை: 24 ஆண்டுகளாக நடக்கும் ஒரு வழக்கில், திடீரென ஒருவரை புதிதாகச் சேர்த்து புகார் கொடுக்க வைத்து கைது செய்கிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல், என்று கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அவரை அழைத்து சென்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "100 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க.அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது.
38 வருடங்களாக பொது வாழ்வில் இருந்து வரும் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை. என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, மகன்கள் பெயரிலோ தமிழகத்தில் எந்த இடத்திலும் நாங்கள் சொத்துக்கள் வாங்கியதில்லை. எந்த சொத்து பிரச்சினையிலும் தலையிட்டதும் இல்லை.
24 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் குடும்ப சொத்து வழக்கில் திடீர் என்று போலீசார் ஒருவரை அழைத்து வந்து எங்கள் மீது பொய் வழக்கு போடச்சொல்லி இருக்கிறார்கள். இதில் நான் போலீசார் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை.
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
பொய் வழக்கு போடப்படுவதால் தி.மு.க. பன்மடங்கு வளர்ந்து பழைய வரலாறு திரும்பும். தி.மு.க.வுக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக