ஆன்லைனில் எல்லாமே கிடைக்கிறது. அரிசி, பருப்பு முதல் தங்கம் வரை ஆன்லைன் சேவை மூலம் பெறலாம். யார் விற்கிறார்கள் எனத் தெரியாமல், பொருளின் தரத்தை நேரில் பார்த்து அறியாமல் ஒரு நம்பிக்கையில் இன்டர்நெட்டில் வாங்குகிறார்கள். நேர்மையான நிறுவனங்களால் பிரச்னையில்லை. ஆனால் மோசடி நிறுவனங்கள், ஆன்லைனில் குறைந்த விலையில் பொருள் விற்பதாக சொல்லி ஏமாற்றி வருகின்றன. இவர்களிடம் பணம் பறிகொடுத்தவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. இப்படித்தான் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சீயக்காய் பொட்டலம் கொடுத்து ரூ. 2100 ஏமாற்றியுள்ளது ஒரு மோசடி நிறுவனம்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். தகவல் சேவை மையம் நடத்தி வருகிறார். ‘சூப்பர் வசதிகளுடன் கூடிய செல்போன்.. வெறும் ரூ. 1,050 மட்டுமே’ என்று ஆன்லைன் ஷாப்பிங்கில் விளம்பரம் பார்த்தார். 2 செல்போன்களுக்கு ஆர்டர் செய்தார். ‘உங்கள் ஆர்டர் ஏற்கப்பட்டது. விரைவில் விபிபி பார்சலில் பொருள் உங்கள் வீடு தேடி வரும். போஸ்ட்மேனிடம் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்’ என்று மெசேஜ் வந்தது. அடுத்த 2 நாட்களில் பார்சலுடன் வந்தார் போஸ்ட்மேன்.
2 செல்போனுக்கு ரூ. 2,100, கமிஷன் தொகை ரூ. 105 செலுத்தி பார்சலை பெற்றுக் கொண்டார் ராஜேந்திரன். ஆர்வத்துடன் பார்சலை பிரித்தார். உள்ளே நன்கு பேக் செய்யப்பட்ட பாலிதீன் கவர் இருந்தது. அதில் 2 பாக்கெட்கள். அதைப் பிரித்தவருக்கு ஷாக். இரண்டும் சீயக்காய் பொட்டலங்கள். பழைய பேப்பரில் சுற்றப்பட்டிருந்தன. ஆன்லைன் ஷாப்பிங்கில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் தபால் நிலையத்தில் விசாரித்தார். பலரும் இதுபோல ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமக்கே தெரியும், இவ்வளவு வசதிகள் கொண்ட செல்போன் எப்படி இவ்வளவு சீப்பாக விற்கிறார்கள் என்று. அப்போதே சுதாரிக்க வேண்டும், அது ஏமாற்று விளம்பரம் என்று. பேராசைப்பட்டு, பணம் அனுப்பி ஏமாறக்கூடாது. மோசடி நிறுவனங்கள் சரியான முகவரி கொடுப்பதில்லை. இதனால் புகார் கொடுத்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியாது. இதுபோன்ற நிறுவனங்களால், உண்மையிலேயே நேர்மையான முறையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக