ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடுத்தாலும் ஜெயில்? வாங்கினாலும் ஜெயில்?

ஓட்டுக்காக பணம் கொடுத்தாலும், வாங்கினாலும்  ஒரு வருடம்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டி:
சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இது வரை 20,000 (200 கம்பெனி) துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். இவர்கள் மாநிலம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக 4,000(40 கம்பெனி) துணை ராணுவப்படையினர் 11ம் தேதி வர உள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

பணம் பட்டுவாடாவை தடுக்க, தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.29.93 கோடி ரொக்க பணம், ரூ.11.39 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகுந்த ஆவணங்களை காட்டியதாக ரூ.5.81 கோடி பணம், பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் ரூ.5.11 கோடி சிக்கியுள்ளது. இது வரை தேர்தல் சம்பந்தமாக 57,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக 141 வழக்குகள், தவறுதலாக வாக னங்களை பயன்படுத்தியதாக 2,705 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுக்காக வாக்காளர் பணம் வாங்கினாலோ அல்லது வாக்காளர்களுக்கு பணம் வழங்கினாலோ ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக 7 பேரும், பணம் வாங்கியதாக 6 பேரும் சிக்கியுள்ளனர். இரவு நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, இரவு நேரங்களில் கண்காணிக்க வசதியாக  மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய தலைவருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும், மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன் கூட்டியே மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக, மதுரை மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்துவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 
தேர்தல் ஆணையம் என்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க சொல்கிறதோ, அது படிதான் நடந்து வருகிறோம். இதில், எந்தவிதமான மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும்.

வாக்குசாவடிகளில் ‘49 ஓ‘ பயன்படுத்துவதற்காக தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. ‘49ஓ‘ வை பயன்படுத்துவோர் வாக்குசாவடி மையங்களில் முதலில் உள்ள வாக்கு சாவடி அலுவலரிடம் பெயர் சொல்லி விட்டு, 2வது அலுவலரிடம் உள்ள ‘17ஏ‘ ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டால் போதும். தேர்தல் செலவுக்காக வேட்பாளர்கள் அனைவரும் வங்கிகளில் புதிய கணக்கை தொடங்கியுள்ளனர். வேட்பாளர்கள் செலவு கணக்குகளை 3 முறை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் இறுதி செலவு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், கட்சியின் சின்னம் பொறுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாளில்  அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

எல்லாரும் ஓட்டு போட வேண்டும்

அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என்று, சில கிராமத்தினர் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனரே  என்று கேட்டதற்கு,  ‘தேர்தலை யாரும்  புறக்கணிக்க கூடாது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும். ஓட்டு போடாமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது‘ என்றார் பிரவீன்குமார்.


ஓட்டுக்கு பணம் பெற்ற 6 வாக்காளர்கள் கைது:


தமிழகத்தில் முதன்முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் பெற்ற வாக்காளர்கள் ஆறு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பரபரப்பாக பணம் வினியோகிக்கும் நிலையில், அதைப்பெற்ற வாக்காளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க., சார்பில் கட்சியின் கிளைச் செயலர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
மனு தாக்கல் துவங்கியது முதலே அ.தி.மு.க., - தி.மு.க., மோதல், முரசு சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கீடு எதிர்த்து அ.தி.மு.க., பிரச்னை, நடிகர் வடிவேலு மீது செருப்பு வீச்சு என, ஸ்ரீரங்கம் தொகுதியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில், தற்போது தேர்தல் கமிஷன், மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளதும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தான்.கடந்த 5ம் தேதி தி.மு.க., வேட்பாளர் ஆனந்துக்கு ஓட்டு சேகரித்து அதவத்தூர் ஊராட்சித் தலைவர் ஆண்டிமணி, அவரது ஆதரவாளர்கள் எம்.ராஜேந்திரன், ராமு, எஸ்.ராஜேந்திரன், சேகர், அன்பழகன், விஜயகுமார் ஆகிய ஏழு பேரும் சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தொகுதி பறக்கும்படையைச் சேர்ந்த சுப்பு உள்ளிட்ட அதிகாரிகள், பணம் வினியோகித்த ஏழு பேரையும் பிடித்தனர். இவர்களை, சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து பணம் பெற்ற, வாக்காளர்கள் அய்யாவு மகன் செல்வம், அய்யனன் மகன் பெரியசாமி, பரமன் மனைவி நாகவள்ளி, பாலசுந்தரம் மனைவி காமாட்சி, சண்முகம், முத்துக்காத்தன் மகன் அமிர்தம் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஓட்டுக்கு வழங்கப்பட்ட, 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறுகையில், "ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வினியோகித்த ஏழு பேர் மட்டுமின்றி, பணம் பெற்ற ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தில் பணம் பெற்ற வாக்காளர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்' என்றார்.
திருச்சி எஸ்.பி., நிஜாமுதீன் கூறுகையில், "சோமரசம்பேட்டை போலீஸ் சரகத்தில் ஓட்டுக்கு பணம் பெற்ற வாக்காளர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பணம் பெறும் வாக்காளர் மீது வழக்கு பதிந்து, தேர்தலுக்குப் பின் நடவடிக்கை எடுப்பர். இங்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்துள்ளோம். இது மாநிலத்தில் முதல்முறையாக இருக்கும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக