ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள வெள்ளையபுரத்தில் நிலபுல வணிகம் நடத்தி வரும் 30 வயதுடைய ராவுத்தர் நைனாமுகமது என்பவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் குற்றச் செயல்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பார்.
அதிகாரிகள் தவறு செய்தாலும் மேலிடத்தில் தெரிவிப்பார்.சில மாதங்களுக்கு முன் அப்பகுதி ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற சரக்குந்து ஒன்றை மடக்கிப் பிடித்த வருவாய்த் துறையினர், பணம் பெற்று கொண்டு லாரியை விடுவித்ததாகவும், பெட்டிக் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை, பங்கீட்டு அரிசி கடத்துவது போன்ற சம்பவங்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தார். இதனால் சில அதிகாரிகள் அவர்மீது வன்மம் கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திருவாடானையிலிருந்து வெள்ளையபுரத்திற்கு, இரு சக்கர வாகனத்தில் ராவுத்தர் நைனாமுகமது சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து வந்த அரசு வாகனம் ஒன்று, அவரை வழிமறித்தது.
வாகனத்திலிருந்து இறங்கிய பறக்கும்படை வட்டாட்சியர் செல்லப்பா, வருவாய் ஆய்வாளர்கள் ராஜாராம், சதீஷ், கோவிந்தராஜ் மற்றும் வாகனச் சாரதி செழியன் ஆகியோர், ராவுத்தர் நைனா முகமதுவை பார்த்து, "எங்களைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுக்கிறாயா?" என்று கேட்டனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் நைனா முகமதுவை வெட்டினர். காயத்துடன் தப்பிய அவர், திருவாடானை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், நைனா முகமதுவுடைய முறையீட்டின் பேரில் து.கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின்படி, எஸ்.பி., பட்டினம் துணை ஆய்வாளர் குணசேகரன் தலைமமயில், நைனா முகமதுவைத் தாக்கிய வட்டாட்சியர் உட்பட ஐந்து பேரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக