சென்னை தீவு திடல் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவன் தில்சன்(13). இவன் அங்குள்ள ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற போது குடியிருப்பைச் சேர்ந்த ராணுவ அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தில்சனை சுட்டுக் கொன்றதாக முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்டதையடுத்து சென்னை 5-ம் விரைவு கோர்ட்டில் நீதிபதி ராதா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்து கடந்த 2 வாரமாக வக்கீல் வாதம் நடந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி ராதா அறிவித்து இருந்தார். சரியாக 11.30 மணி அளவில் புழல் சிறையில் இருந்து ராணுவ அதிகாரி ராமராஜ் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டு நீதிபதி ராதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, ராமராஜிடம் தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராமராஜ் இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, வழக்கு பற்றி கேட்கவில்லை. கொடுக்க போகும் தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ராமராஜ், நான் குற்றவாளி கிடையாது. 40 ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். இந்த குற்றத்தை நான் செய்ய வில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி தீர்ப்பு கூறினார். சிறுவன் தில்சனை கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளி ராமராஜிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பில் கூறினார். அபராத தொகையில் ரூ. 50 ஆயிரத்தை சிறுவன் தில்சன் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பையடுத்து ராணுவ அதிகாரி ராமராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக